கர்நாடகாவில் 7 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் தீர்ப்பைக் கண்டித்தும், இதை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும் தமிழ் மற்றும் கன்னட அமைப்பினர் பெங்களூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த 2000-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி கோலார் மாவட்டத்தில் உள்ள கம்பலப்பள்ளி கிராமத்தில் உயர் வகுப்பைச் சேர்ந்த சிலர், 7 தலித்துகளை வீட்டுக்குள் அடைத்து உயிருடன் எரித்துக் கொன்றனர். இதுதொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 32 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த வாரம் 32 பேரையும் விடுதலை செய்தது.
இந்தத் தீர்ப்பைக் கண்டித்து கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் தலைமையில் திங்கள்கிழமை பெங்களூர் டவுன் ஹால் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெங்களூர், கோலார், ராம்நகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
கர்நாடக தமிழர்களும், கன்னடர்களும் இணைந்து ஒற்றுமையாக நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.
அப்போது கர்நாடக அரசுக்கு எதிராகவும், சாதி வெறியர்களுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
அச்சத்தில் சாட்சிகள்
ஆர்ப்பாட்டத்தின்போது கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவர் பன்முகன் கூறியதாவது:
கம்பலபள்ளி கிராமத்தில் 7 தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் போதிய சாட்சிகள் இல்லை எனக் கூறி 32 குற்றவாளிகளையும் நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த வழக்குக்கு தேவையான சாட்சிகளும், போதிய ஆதாரங்களும் இருக்கின்றன. சம்பவத்தை நேரில் பார்த்த 7 பேர் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார்கள். அவர்களை ஏன் நீதிமன்றம் விசாரிக்கவில்லை? உயிருக்கு பயந்து அவர்கள் நீதிமன்றத்துக்கு வந்து வாக்குமூலம் அளிக்கவில்லை.
இவ்வழக்கில் கொல்லப்பட்ட அப்பாவி தலித் மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில், கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். இந்த பாதக செயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இது தொடர்பாக பல்வேறு அமைப்புகளின் சார்பாக கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவை புதன்கிழமை சந்தித்து மனு அளிக்க இருக்கிறோம் என பன்முகன் தெரிவித்தார்.