இந்தியா

டெல்லி சிக்கல் தீருமா?-பாஜகவுடன் இன்று முக்கிய ஆலோசனை

செய்திப்பிரிவு

டெல்லியில் யார் புதிய ஆட்சி அமைப்பது என்பதில் நீடிக்கும் இழுபறிக்கு தீர்வு காணும் வகையில் இன்று டெல்லி பாஜக முதல்வர் வேட்பாளருடன், அம்மாநில துணை நிலை ஆளுநர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக 31 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பட்ட முறையில் பெரிய கட்சியாக விளங்குகிறது. முதல் முறையாக தேர்தல் களம் கண்ட ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களை கைப்பற்றியுள்ளது.

எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆம் ஆத்மி பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என தெரிவித்துவிட்டது. இதனால் டெல்லியில் ஆட்சி அமைப்பது யார் என அங்கு குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. இத்தகைய சூழலில் பாஜகவும், ஆம் ஆத்மி கட்சியும் மீண்டும் புதிய தேர்தலை சந்திக்கத் தயாராகி விட்டன.

இந்நிலையில், டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், புதிய அரசு அமைக்கும் பிரச்சினை குறித்து பாஜகவின் முதல்வர் வேட்பாளர் ஹர்ஷவர்தனுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

முன்னதாக நேற்று, டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்-ஐ தொலைபேசியில் தொடர்பு கொண்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் புதிய அரசு அமைப்பதில் நிலவும் சிக்கல் குறித்து கேட்டறிந்துள்ளார்.

SCROLL FOR NEXT