இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு மனுத்தாக்கல் தொடங்கியது: சோனியாவுடன் பாஜக குழு நாளை சந்திப்பு - எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனை

பிடிஐ

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் நேற்று முறைப்படி வெளியிட்டது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர். இதுபோல பாஜக குழுவினர் நாளை சோனியாவை சந்திக்க உள்ளனர்.

இப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், தேர்தல் அலுவலரும் மக்களவை செயலாளருமான அனூப் மிஸ்ரா குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கையை நேற்று முறைப்படி வெளியிட்டார். இதன்படி வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.

வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 28-ம் தேதி கடைசி நாள் ஆகும். மனுக்கள் 29-ம் தேதி பரிசீலிக்கப்படும். ஜூலை 1-ம் தேதி மனுக்களை விலக்கிக் கொள்ள கடைசி நாள் ஆகும். போட்டி இருந்தால் ஜூலை 17-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூலை 20-ம் தேதி நடைபெறும்.

இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் ஏற்கக் கூடிய ஒருவரை வேட்பாளராக நிறுத்த ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணியும் எதிர்க் கட்சியினரும் திட்டமிட்டுள்ளனர். ஆனால், இதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை எனில் தனித்தனியாக வேட்பாளரை நிறுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் அமைதி காத்து வந்த பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு ஆகிய 3 பேர் கொண்ட குழுவை அமைத்தார். இவர்கள் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்யும் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவார்கள் என கூறப்பட்டது.

இதன்படி, இக்குழுவினர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை நாளை சந்தித்துப் பேச உள்ளனர். அதன் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல், பகுஜன் சமாஜ் மூத்த தலைவர் சதிஷ் சந்திர மிஸ்ரா, பாமக எம்.பி. அன்புமணி ஆகியோருடன் வெங்கய்ய நாயுடு ஏற்கெனவே பேசியதாகக் கூறப்படுகிறது. படேல் மற்றும் மிஸ்ரா ஆகிய இருவரும் விரைவில் இக்குழுவை சந்தித்துப் பேச உள்ளனர்.

இதுபோல, குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இது தொடர்பாக 17 கட்சித் தலைவர்களுடன் சோனியா காந்தி ஏற்கெனவே ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் 10 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இக்குழு நேற்று முதன்முறை யாக கூடி ஆலோசனை நடத்தியது. இதில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்காக காத்திருப்பது என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT