பிஹார் 34 பேரை கொலை செய்த குற்றத்துக்காக 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளார்.
பிஹாரில் உயர் சாதி வகுப்பினர் 34 பேரை கொலை செய்த குற்றத்துக்காக, கிருஷ்ண மோச்சி, நன்ஹே லால் மோச்சி, பிர் குவேர் பஸ்வான், தர்மேந்திர சிங் (எ) தருசிங் ஆகிய 4 பேர் கடந்த 1992-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அனைவருக்கும் செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த 2001-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த 2002-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி உறுதி செய்தது. அதன்பிறகு 4 பேர் சார்பிலும் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதிக்கு முன்னதாகவே குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பப்பட்டது.
கால தாமதம்
ஆனால், பிஹார் சிறைத்துறை ஐ.ஜி. அந்த மனுக்களை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கோ அல்லது குடியரசுத் தலை வருக்கோ அனுப்பவில்லை. தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டுக்குப் பிறகு, 12 ஆண்டுகள் கழிந்த நிலையில் கருணை மனுக்கள் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அதன்பின், கருணை மனுக் களை நிராகரித்து அவர்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை அனுப்பியது. அதை பரிசீலித்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இந்த விவகாரத்தில் கருணை மனுக்கள் பல ஆண்டுகளாக தாமதப்படுத்தியது உட்பட வழக்கின் தன்மையை கவனத்தில் கொண்டு, உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை நிராகரித்தார். அத்துடன் 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி புத்தாண்டு தினத்தில் உத்தரவிட்டுள்ளார். இதனால் 4 பேருக்கும் மறுவாழ்வு கிடைத்துள்ளது.