சமையல் காஸ் விநியோகிப்பாளர்களின் இரு பெரும் கூட்டமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்ட காலவரையற்ற வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மும்பையில் மத்திய பெட்ரோலியத் துறை மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் கூட்டமைப்பின் நிர்வாகிகள் திங்கள்கிழமை பேச்சு நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து இரு கூட்டமைப்புகள் சார்பில் ஏ.ஐ.எல்.டி.எப். தலைவர் பிரதாப் ஜோஷி “தி இந்து”விடம் தொலைபேசியில் கூறியதாவது:
மார்கெட்டிங் விநியோகிப்பாளர் வழிகாட்டு நெறிகளான “எம்.டி.ஜி - 2014” ஐ மத்திய அரசு கடந்த 21-ம் தேதி முதல் அமல்படுத்தியது. இதில் எங்கள் கோரிக்கைகள் எதுவும் இணைக்கப்படாததால் வேலை நிறுத்தம் அறிவித்தோம். இந்நிலையில் தற்போது நடந்த முதல்கட்ட பேச்சுவார்த்தையில், 6 பேர் கொண்ட உயர்நிலைக் குழு அமைத்து எங்கள் கோரிக்கைகள் எம்.டி.ஜி – 2014-ல் இணைக்கப்படும் என கூறியுள்ளனர்.
இந்தக் குழு மார்ச் மாதத்திற்குள் தனது பரிந்துரைகளை அளிக்கும். இந்நிலையில் அடுத்தகட்டமாக செவ்வாய்க்கிழமை (இன்று) டெல்லியில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம் என்றார்.