இந்தியா

பிரியாணியில் மாட்டிறைச்சியா?- ஹரியாணா போலீஸ் சோதனை

அஷோக் குமார்

ஹரியாணா மாநிலம் மேவாட் நகரில் பிரியாணியில் மாட்டிறைச்சி கலந்து உள்ளதா என போலீஸார் சோதணை நடத்தியுள்ளனர்.

ஹரியாணா மாநிலத்தில் பசு வதை தடுப்பு சட்டம் அமுலில் இருப்பதால் அங்கு பசுக்களை கடத்துவதும், அவற்றை வதைப்பதும் சட்டப்படி குற்றம் ஆகும்.

இதனை தொடர்ந்து ஹரியாணாவில் மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

மாட்டிறைச்சி பயன்பாட்டை தடுக்க ஹரியாணா போலீஸ் அதிகாரிகளுடன் உள்ளூர் பசு பாதுகாப்பு அமைப்பினரும் இணைந்து மாட்டிறைச்சி பயன்பாட்டை தடுக்கும் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஹரியாணாவில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் மேவாட் நகரில் மாட்டிறைச்சி அதிகம் உபயோகப்படுத்தபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, மேவாட் நகரில் தெருவோர கடைகளிலும், உணவு விடுதிகளிலும் மாட்டிறைச்சி கலந்து உள்ளதா என்பதை கண்டறிய சோதனையில் போலீஸாரும், உள்ளூர் பசு பாதுகாப்பு அமைப்பினரும் இறங்கினர்.

இது தொடர்பாக கவ் சேவா ஆயோக்கின் தலைவர் பானி ராம் மங்லே 'தி இந்து' விடம் (ஆங்கிலம்) கூறும்போது, "ஹரியாணாவில் பசுகளை பாதுகாப்பதற்காக கடுமையான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் பசு வதை சட்டத்தை மீறி மேவாட் நகர் உட்பட ஹரியாணாவின் பல பகுதிகளில் மாட்டிறைச்சி கலந்த பிரியாணிகள் விற்பனை செய்யப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினோம். நாங்கள் கைப்பற்றிய மாட்டிறைச்சி அடங்கிய பிரியாணிகளை சோதனைக்காக போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளோம். விரைவில் மாட்டிறைச்சியை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ஹரியாணா மாநிலம் டிஐஜி பார்தி அரோரா கூறும்போது, "மாட்டிறைச்சி விற்பனை குறித்து வரும் குற்றச்சாட்டுகளை கவனிப்பதற்காக சிறப்பு குழு ஒன்று நியமித்துள்ளோம்.விரைவில் மாட்டிறைச்சி விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT