கேரளத்தில் மதுவுக்கு தடை விதித்து மாநில அரசு எடுத்த முடிவுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவால் மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் சுற்றுலா தொழிலும் நலிவடையும் என்றார் அவர்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
மதுவுக்கு தடை விதித்துள்ளது ஜனரஞ்சக திட்டம். மதுபான வரி மூலமாக மாநிலத்துக்கு 22 சதவீத வருவாய் கிடைக்கிறது. இது பாதிப்புக்கு உள்ளாகும். இதனால் சமூக நலத்திட்டங்கள் தடைபடும்.
மதுவிலக்கு குஜராத், மணிப்பூரில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஆந்திரம், ஹரியாணா, அமெரிக்காவில் தோல்வி அடைந்துவிட்டது.
கேரளத்திலிருந்து மது தேடி வருவோருக்காக எல்லையில் டாஸ்மாக் கடைகளை திறக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கேரளம் குடிக்காமல் இருக்கப்போவதில்லை. ஆனால் வருவாய் தமிழகத்துக்கு போகப் போகிறது. இவ்வாறு சசி தரூர் கூறியுள்ளார்.