இந்தியா

ஒரு லட்சம் ஏக்கரில் ஆந்திர தலைநகரம்

செய்திப்பிரிவு

புதிய தலைநகரை நிர்மாணிப்பதற்காக நான்கு கட்டங்களாக 1 லட்சம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த ஆந்திர மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

தலைநகருக்கான ஏற்பாடுகள் குறித்த அமைச்சரவை குழுவின் ஆலோசனைக் கூட்டம் ஹைதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நாராயணா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதிய தலைநகரை நிர்மாணிப்பதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு 1 லட்சம் ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதற்காக 4 கட்டங்களாக நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 3 மாதங்களில் 25 ஆயிரம் ஏக்கர் நிலமும், 2-ம் கட்டமாக 6 மாதங்களுக்குள் 25 ஆயிரம் நிலமும் கையகப்படுத்தப்படும். இதில் முதல்கட்டமாக கையகப்படுத்தப்படும் நிலத்தில் தலைமைச் செயலகம், சட்டசபை, உயர் நீதிமன்றம், அரசு அலுவலக ஊழியர்கள் குடியிருப்புகள் நிர்மானிக்கப்படும்.

இதற்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு, மற்ற மாநிலங் களைவிட கூடுதலாக 10 சதவீதம் இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தலைநகரம் விஜயவாடா, தெனாலி, மங்களகிரி மற்றும் குண்டூர் ஆகிய பகுதிகளில் அமையும். இவ்வாறு அமைச்சர் நாராயணா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT