இந்தியா

பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் போதைப்பொருளை ஒரே மாதத்தில் ஒழிப்போம்: ராகுல் காந்தி சூளுரை

செய்திப்பிரிவு

‘பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், போதைப் பொருள் பிரச்சினைக்கு ஒரே மாதத்தில் தீர்வு காணப்படும்’ என, அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

பஞ்சாபில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுத்து நிறுத்த பாஜக-அகாலிதளம் தலைமையிலான மாநில அரசு தவறிவிட்டதைக் கண்டித்து, ஜலந்தரில் காங்கிரஸ் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசும்போது, ‘‘பஞ்சாபில் போதைப்பொருள் விற்பனையால் கிடைக்கும் ஆதாயத்தை கருத்தில் கொண்டு, மாநில அரசு அதை ஊக்கு விக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒரே மாதத்தில் இப்பிரச் சினைக்கு தீர்வு காணுவோம்.

காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தாலே போதைப்பொருளை ஒழித்துவிட லாம். ஆனால் அதை காங்கிரஸால் மட்டுமே செய்யமுடியும். நாட்டில் தொழில் தொடங்குவதை எளி தாக்குவதாக மோடி கூறிக்கொண் டிருக்கிறார். ஆனால், பஞ்சாபில் போதைப்பொருள் வியாபாரம் மட்டும்தான் சுலபமாக செய்யக் கூடியதாக உள்ளது’’ என்றார்.

அடுத்தாண்டு நடைபெற உள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட உள்ள அமரிந்தர் சிங் உள்ளிட் டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆம் ஆத்மி விமர்சனம்

இதற்கிடையே, போதைப்பொரு ளுக்கு எதிராக போராட ராகுலுக்கு தார்மீக உரிமையில்லை என ஆம் ஆத்மி கட்சி விமர்சித்துள்ளது.

‘பஞ்சாபில், 2012-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, மாநிலத்தில் போதைப்பொருள் அச் சுறுத்தல் அபாயகரமான நிலையை எட்டியிருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையாளர் குரேஷி கூறியபோதும், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கள்ள மவுனம் சாதித்தார்.

அப்போது முதல்வராக இருந்த அமரிந்தர் சிங், சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். போதைப் பொருளுக்கு எதிராக இப்போது காங்கிரஸ் போராட்டம் நடத்துவது கேலிக்கூத்தாக இருக்கிறது’ என, ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர் பகவந்த் மான் கூறினார்.

பஞ்சாபில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு அதிகரித்திருப்பதைக் கண்டித்து ஜலந்தரில் உள்ள துணை ஆணையாளர் அலுவலகம் முன்பாக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT