பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் இந்தியக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.
மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டம், மோகன்பூர் என்ற இடத்தில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் 4-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது:
நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு நம் நாட்டின் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தரமான வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ள தற்போது அனுமதி அளிக்கப்படுகிறது. உயர் அங்கீகாரம் பெற்ற இந்தியக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு இணைப்பு பெற்ற இந்தியக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பட்டப்படிப்புக்கு 2 பருவங்களும் (செமஸ்டர்), பட்ட மேற்படிப்புக்கு 1 பருவமும் வெளிநாட்டில் படிக்கலாம். இம்மாணவர்களுக்கு பட்டப் படிப்பு சான்றிதழை இந்திய கல்லூரியே வழங்கும். வெளிநாட்டு கல்வி நிறுவனத்துடன் இணைந்து சான்றிதழ் வழங்க அனுமதியில்லை. இந்த சான்றிதழ்களில் வெளிநாட்டு கல்வி நிறுவனத்தின் பெயரும் இடம்பெறாது.
இவ்வாறு அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசினார்.