இந்தியா

ஜேஎன்யூ மாணவர் காணாமல் போன வழக்கு சிபிஐக்கு மாற்றம்

செய்திப்பிரிவு

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாயமான மாணவர் நஜீப் அகமதுவின் வழக்கை சிபிஐக்கு மாற்றி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின், உயிரி தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நஜீப் அகமது என்ற மாணவர் காணாமல் போன வழக்கை டெல்லி போலீஸார் விசாரித்து வந்தனர். நஜீப் அகமதுவை கண்டுபிடிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை டெல்லி போலீஸார் அமைத்து அவரைத் தேடி வந்தனர்.

மேலும் காணாமல் போன மாணவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு, ரூ.50000 சன்மானமும் டெல்லி போலீஸரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத சூழலில் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி மாணவரின் தாயார் டெல்லி உயர் நீதிமன்றத்திடம் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ் சிஸ்தானி மற்றும் ரேகா பள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இவ்வழக்கை போலீஸாரிடமிருந்து சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை ஜுலை 17-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் உயிரி தொழில்நுட்பத் துறை மாணவரான நஜீப் அகமது,கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் (2016 அக்டோபர் 15-ல்) காணாமல் போனார்.

ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், நஜீப் அகமது உள்ளிட்ட சிலரைத் தாக்கியதாகவும், அதனைத்தொடர்ந்தே அவர் மாயமானதாகவும், இடதுசாரி தொடர்புடைய அகில இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT