ஒடிசாவின் தாலி மலைப்பகுதியில் பேருந்து விபத்துக்குள்ளானதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 40 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து, கோர்தா மாவட்ட ஆட்சியர் நிரஞ்சன் ஷாகு கூறும்போது, "மேற்கு வங்க மாநிலத்தின் மித்னாபூர் பகுதியைச் சேர்ந்த 65 சுற்றுலாப் பயணிகள், பயணம் செய்த பேருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஒடிசாவின் தாலி மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் சுற்றுலாப் பயணிகள் 40 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 15 பேர் பெண்கள், 4 பேர் குழந்தைகள்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு 8 மருத்துவர்களைக் கொண்ட சிறப்புக் குழு சிகிச்சை அளித்து வருகிறது" என்று கூறினார்.
பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்ததே விபத்து ஏற்படக் காரணம் என்று கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.