இந்தியா

புகழ்பெற்ற வங்க மொழி மூத்த எழுத்தாளரும், பழங்குடி மக்கள் தொண்டருமான மஹாஸ்வேதா தேவி காலமானார்

செய்திப்பிரிவு

புகழ்பெற்ற வங்க மொழி எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளரும், பழங்குடி மக்கள் தொண்டருமான மஹாஸ்வேதா தேவி வியாழக்கிழமையன்று கொல்கத்தாவில் காலமானார். இவருக்கு வயது 90.

இவர் கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதி தெற்கு கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ரத்தத்தில் தீவிர கிருமி தொற்று ஏற்பட்டு ரத்தம் அசுத்தமாயிருந்தது, மேலும் சிறுநீர்ப்பாதை நோயும் இருந்து வந்தது. சர்க்கரை நோயும் இவருக்கு இருந்தது, இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மதியம் 3 மணியளவில் இவரது உயிர் பிரிந்தது.

1940-களில் கம்யூனிஸ்ட் இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டு மேற்கு வங்கத்தின் ஏழ்மையிலும் ஏழ்மையான பழங்குடி மக்களிடையே சமூகப் பணியில் ஈடுபட்டார். பழங்குடி மக்கள் உரிமைக்காக போராடியவர்களில் மஹாஸ்வேதா தேவி குறிப்பிடத்தகுந்தவர்.

வங்க மொழி திரைப்பட இயக்குநர் ரித்விக் கட்டக் இவரது மாமா. வங்க மொழி இலக்கியம் மற்றும் நாடகத்துறை எழுத்தாளர் பைஜன் பட்டாச்சார்யா இவரது கணவர். ஒரு அறிவார்த்த சூழலில் மஹாஸ்வேதா தேவி தன் சமூகப்பணியில் சந்தித்த மனிதர்கள் பெரும்பாலோனரை தனது கதை மாந்தர்களாக படைப்பில் சித்திரப்படுத்தியுள்ளார். இவரது மொழி நடை சிக்கல் நிரம்பியது. அதாவது ஒரு புதிர்ப்பாதையில் பயணிப்பது போன்ற நடையாகும்.

பிரதமர் மோடி தனது ட்வீட்டில் அஞ்சலி செலுத்தும்போது, “பேனாவின் வலிமை என்ன என்பதை மஹாஸ்வேதா தேவி எடுத்துக்காட்டியவர். கருணை, சமத்துவம், மற்றும் நீதியின் குரல் அவருடையது. அவரது மறைவு நம்மிடையே ஆழ்ந்த வருத்தங்களை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா தனது ட்வீட்டில், “இந்தியா ஒரு மகத்தான எழுத்தாளரை இழந்து விட்டது. வங்காளம் அதன் ஒளிமிகுந்த தாயை இழந்து விட்டது, நான் எனது சொந்த வழிகாட்டியை இழ்ந்துள்ளேன் அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று கூறியுள்ளார்.

மஹாஸ்வேதா தேவி (1926-2016) ஒரு சிறு குறிப்பு:

மஹாஸ்வேதா தேவி 1926-ம் ஆண்டு டாக்காவில் பிறந்தார். இவரது தந்தை மணீஷ் கட்டக் நன்கு அறியப்பட்ட கவிஞர் மற்றும் நாவலாசிரியர். தாயார் தாரித்ரி தேவியும் எழுத்தாளர் மற்றும் சமூகப்பணியாளர்.

பிரிவினைக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் மஹாஸ்வேதா தேவி குடும்பம் குடியேறியது. ரவீந்திர நாத் தாகூரின் சாந்தி நிகேதனில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தில் பி.ஏ. ஆங்கிலம் (ஹானர்ஸ்) முடித்தார். பிறகு கொல்கத்தாவில் எம்.ஏ. ஆங்கிலமும் முடித்தார். பைஜன் பட்டாச்சாரியாவை மணம் முடித்தார், இருவருக்கும் நபருன் பட்டாச்சரியா என்ற மகன் பிறந்தார், இவரும் பிற்பாடு இந்தியாவின் முன்னணி நாவலாசரியராக திகழ்ந்தார். 1959-ல் பைஜன் பட்டாச்சரியாவிடமிருந்து பிரிந்தார்.

1964-ம் ஆண்டு முதல் இவர் பழங்குடியினருக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்கத் தொடங்கினார். பிஹார், மத்திய பிரதேசம், சட்டிஸ்கர் மாநில பழங்குடியினர் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகும் போது இவர் எதிர்த்துப் போராடினார், தீண்டாமையை எதிர்த்தும், அடக்குமுறையை எதிர்த்தும் போராடிய இவர் தன் கதைகளில் நிலப்பிரபுத்துவ, ஆதிக்க சாதி வன்முறைகளை கடுமையாக விமர்சித்தார்.

“உண்மையான வரலாற்றை உருவாக்குபவர்கள் சாதாரண மக்களே. நான் இவர்களை எழுதுவதற்குக் காரணம், இவர்கள் கடுமையாக சுரண்டப்படுபவர்கள், பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படுபவர்கள். ஆனாலும் தோல்வியை ஏற்க மறுப்பவர்கள், அதனால்தான் இவர்கள் எனது எழுத்தில் அதிக தாக்கம் செலுத்திவருகின்றனர். என்னுடைய எழுத்து இம்மக்களின் செயல்” என்று அவர் ஒரு முறை கூறினார்.

இவரது சமூகப்பணிகளுக்காக மகசசே விருது அளிக்கப்பட்டது. இவரது பிரெஸ்ட் ஸ்டோரிஸ் என்ற சிறுகதைத் தொகுதி ஒடுக்கப்பட்ட, பழங்குடி பெண்களின் வாழ்க்கையை அதன் அத்தனை கொடூரங்களுடனும் கூட இயல்பான அவர்களது வாழ்க்கையை பிரதிபலிப்பதாக அமைந்ததாகும். ஸ்தனதாயினி என்ற கதை இதற்குச் சான்று.

மேல் சாதியினரின் மூடநம்பிக்கைகள், மதநம்பிக்கைகள் எப்படி படிப்பறிவில்லாத ஏழை ஜனங்களை கடுமையாகச் சுரண்ட, ஏமாற்ற, அவர்களை ஒன்றுமில்லாமல் அடித்து பிச்சைக்காரர்களாக மாற்ற பயன்படுத்தப்பட்டது என்பது இவரது கதைகளில் அடியோட்டமாக செல்லும் ஒரு வரலாற்று இழையாகும்.

சோட்டி முண்டா அண்ட் ஹிஸ் ஏரோ என்ற நாவல் மேஜிக்கல் ரியலிச வகையைச் சேர்ந்ததாகும். இதில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு அறியாத வேறொரு அடித்தட்டு மக்கள் வரலாறு சிதறிக் கிடக்கும். இன்னும் சொல்லப்போனால் இதில் சித்தரிக்கப்படும் முண்டா மனிதர்கள் சுதந்திரப் போராட்டம் என்ற ஒன்று நடைபெற்று வந்ததையே அறியாதவர்கள். இந்த நாவலும், இவரத் இமேஜினரி மேப்ஸ் என்ற படைப்பும். பிரெஸ்ட் ஸ்டோரிஸ் கதைகளும் மிகச்சிறந்த பின் அமைப்பு வாத விமர்சகர் காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது.

டஸ்ட் ஆன் தி ரோட், ‘அவர் நான் வெஜ் கவ்’, அவுட் காஸ்ட், திரௌபதி ஆகியவை உள்ளிட்ட படைப்புகளும் குறிப்பிடத்தகுந்த விமர்சன கவனத்தை ஈர்த்துள்ளன. இவரது படைப்புகள் சில திரைப்பட ஆக்கங்களாகவும் வந்துள்ளன. இவரது கதைகள் பல மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளன. தமிழிலும் இவரது கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

காடுகளை அக்ரமித்தல் என்ற இவரது படைப்புக்கு 1979-ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது அளிக்கப்பட்டது. 1996-ம் ஆண்டு ஞானபீட விருதையும் பெற்றார் மஹாஸ்வேதா தேவி. பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், மகசசே ஆகிய விருதுகளையும் வென்றுள்ளார் இவர்.

SCROLL FOR NEXT