இந்தியா

கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம்: நடிகர் ரஜினிகாந்த் மீதான வழக்கு ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

இரா.வினோத்

பெங்களூருவை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் கடந்த மார்ச் 26-ம் தேதி பெங்களூரு மாநகர குடிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக‌ வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், ‘நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் வெளியாகும்போதெல்லாம் ரசிகர்கள் அவரது கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் வீணாகிறது. குழந்தைகளும், முதியவர்களும் குடிக்க பாலின்றி தவிக்கும் சூழலில், கட் அவுட் டுக்கு பால் அபிஷேகம் அவசி யமா? இதை தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், உரிய பதில் அளிக்கும்படி ரஜினிகாந்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இவ்வழக்கு நேற்று பெங்க ளூரு மாநகர குடிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி இ.எஸ்.ரேகா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ரஜினிகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மஞ்சுநாத், ‘‘உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா வில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோ தான் நாடு திரும்புகிறார். எனவே பதில் அளிக்க வசதியாக வழக்கை அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும்’’ என்றார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இ.எஸ்.ரேகா, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

SCROLL FOR NEXT