ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு மத்திய அரசின் ஒப்புதலை விரைவாகப் பெற்றதில் டெல்லியில் பணியாற்றும் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் முக்கியப் பங்காற்றியுள்ளனர்.
டெல்லியில் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் பணியாற்றி வருகின்றனர். யுபிஎஸ்சி குடிமைப்பணி தேர்வின் வெற்றிக்குப் பிறகு இவர்கள் பல்வேறு மாநிலங்களில் பணி அமர்த்தப்படுகிறார்கள். என்றாலும் தங்கள் மண்ணுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கும் போது தவறாமல் செய்து வருகின்றனர். இதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் தற்போது ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இவர்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.
2000-ம் ஆண்டு பேட்ச், பிஹார் மாநில அதிகாரி டாக்டர் என்.சரவணக்குமார், 2002-ம் ஆண்டு பேட்ச், உ.பி. மாநிலப் பிரிவின் சி.செந்தில்பாண்டியன், 1991-ம் ஆண்டு தமிழக பிரிவின் நா.முருகானந்தம் ஆகிய மூவரும் டெல்லியில் ஜல்லிக்கட்டு மசோதா விவகாரத்தில் அண்மையில் முக்கியப் பங்காற்றியுள்ளனர்.
அருப்புக்கோட்டையை சேர்ந்த சரவணக்குமார், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திட மும், மதுரையை சேர்ந்த செந்தில் பாண்டியன், மத்திய கப்பல் மற்றும் சாலைப்போக்குவரத்து அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடமும் சிறப்பு செயலாளர்களாக உள்ள னர். தமிழக அரசின் முதன்மை உள்ளுரை ஆணையர் (இரண்டு) பதவியில் முருகானந்தம் கடந்த 23-ம் தேதி புதிதாக அமர்த்தப் பட்டுள்ளார். மத்திய அரசுப் பணி யில் இருந்த இவர், அதனை முடித்து மீண்டும் தமிழகப் பணி யில் இணைவதற்கு முன்பாகவே ஜல்லிக்கட்டுக்காக உதவத் தொடங்கிவிட்டார். இவர்கள் மூவரும், ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச்சட்ட முன்வடிவு, மசோதா ஆகிய இரண்டிலும் மத்திய அமைச்சர்கள் மற்றும் உயரதி காரிகளுக்கு எழுந்த சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்து வைத்துள்ளனர். இதனால் சட்ட முன்வடிவு மற்றும் மசோதா விரைவாக குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு உள்ளாகியது.
இவர்களுடன், 1993-ம் ஆண்டு தமிழக பிரிவின் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரும் சென்னையில் இருந்தபடி முக்கியப் பங்காற்றி உள்ளனர். இவர்களில், தமிழக முதல்வரின் தனிச்செயலாளர் சா.விஜயகுமார், கால்நடை மற்றும் மீன்வளத் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி பாராட்டுதலுக்கு உரியவர்கள். சென்னையைச் சேர்ந்த விஜயகுமார் முதல்வர் அலுவலகத்தில் நியமிக்கப்படும் முன், கால்நடை மற்றும் மீன்வளத் துறை செயலாளராக பணியாற்றிவர். இதனால் அவருக்கு ஜல்லிக்கட்டு பிரச்சினை குறித்த அனைத்து விவரங்களும் தெரிந்துள்ளது.
இவர்கள் இருவரின் முக்கிய முயற்சியால் தான் மிருகவதை தடுப்புச் சட்டம் 1960-ல் திருத்தம் மேற்கொள்ள அவசரச்சட்ட முன்வடிவு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஐவரில் ககன்தீப்சிங் பேடி சண்டிகாரை சேர்ந்தவர். மற்ற நால்வரும் தமிழர்கள் என்பதால் சிறுவயது முதலே ஜல்லிக்கட்டு பற்றி அறிந்தவர்கள் ஆவர்.