‘நீட்’ மருத்துவ நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக் களுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர் வெ.ஏழுமலை வலியுறுத்தினார்.
ஆரணி எம்.பி.யான வெ.ஏழுமலை, மக்களவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் இந்த விவகாரத்தை எழுப்பினார். அப்போது அவர் பேசியதாவது:
மாணவர்கள் பாதிப்பு
மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்) அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் திட்டம், மாநிலத்தின் உரிமைகளில் தலையிடுவதாகும். இதை அறிமுகப்படுத்தினால் அது நகர்ப்புறங்களில் வசிக்கும் வசதி படைத்த மாணவர்களுக்கு சாதகமாக அமையும் என்றும் இவர்களுடன் சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள கிராமப்புற ஏழை மாணவர்கள் போட்டியிட முடியாது என்றும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பலமுறை கூறியுள்ளார்.
நகர்ப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் பயிற்சி மையங்களோ, வகுப்புகளோ, சாதனங்களோ கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்காத நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் கிராமம் மற்றும் சிற்றூர்களில் வசிக்கும் ஏழை மாணவர் மனதில் ‘நீட்’ தேர்வு குழப்பத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் தற்போது கடைபிடித்து வரும் கொள்கையை பாதுகாக்க, இந்திய அரசியல் சாசன விதி எண் 254(2) அடிப்படையில், இரு மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்க உடனடியாக பரிந்துரைக்க வேண்டும்.
இவ்வாறு வெ.ஏழுமலை பேசினார்.