இந்தியா

‘தாவூதுடன் நெருங்கியதால் பத்திரிகையாளர் ஜே டே கொலை’: சோட்டா ராஜன் தொலைபேசி உரையாடலில் முக்கிய தகவல்

செய்திப்பிரிவு

தாவூத் இப்ராஹிமுடன் நெருங்கியதால் பத்திரிகையாளர் ஜே டேவை கொலை செய்ததாக தொலைபேசி உரையாடலில் சோட்டா ராஜன் கூறியுள்ளார். இந்த ஆடியோ பதிவு மும்பை நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2011 ஜூன் 11-ம் தேதி மும்பையில் பத்திரிகையாளர் ஜே டேவை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இதில் நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.

ஆனால் சோட்டா ராஜன் இந்தியாவில் இருந்து தப்பி இந்தோனேசியாவில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அதன்பின் கடந்த 2016 அக்டோபர் 25-ம் தேதி இந்தோனேசியாவின் பாலி விமான நிலையத்தில் சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார். இதைத் தொடர்ந்து ஜே டே கொலை வழக்கு விசாரணை வேகம் பெற்றது.

இந்த வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சோட்டா ராஜனுக்கும் அவரது கூட்டாளி மனோஜ் சிவதாசனிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் ஆடியோ பதிவை அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

ஜே டே கொலைக்குப் பிறகு இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், தாதா தாவூத் இப்ராஹிமுடன் ஜே டே மிகவும் நெருங்கியதாக வும் வரம்பு மீறி செயல்பட்ட தாலும் அவரை கொலை செய்த தாக சோட்டா ராஜன் கூறியுள்ளார்.

நேற்றைய விசாரணையில் மனோஜ் சிவதாசனி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது ஆடியோ பதிவில் சோட்டா ராஜனின் குரலை அவர் உறுதி செய்தார்.

வழக்கு பின்னணி

தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியாக இருந்த சோட்டா ராஜன் பின்னர் தனியாக பிரிந்தார். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய தாவூத் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இதே போல சோட்டா ராஜனும் பல்வேறு நாடுகளில் தலைமறைவாக இருந்து இறுதியாக ஆஸ்திரேலியாவில் பதுங்கினார்.

70 வழக்கு

இருவரும் வெளிநாடுகளில் இருந்துகொண்டே மும்பையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சோட்டா ராஜனுக்கு எதிராக பத்திரிகையாளர் ஜே டே பல்வேறு செய்திகளை வெளியிட்டார். இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. ஜே டே வழக்கையும் சேர்ந்து சோட்டா ராஜன் மீது 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

SCROLL FOR NEXT