இந்தியா

அன்புள்ள மோடி மாமா: சுற்றுச்சூழலை காக்க பிரதமருக்கு பெங்களூரு மாணவர்கள் மடல்!

செய்திப்பிரிவு

பெங்களூரு பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளிக்கு அருகில் இருக்கும் ஏரியின் மாசுபாட்டை சரி செய்யக் கோரி, பிரதமர் மோடிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர்.

பெங்களூரு, வர்தூர் கே. கே. ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தங்களின் பள்ளிக்கு அருகில் உள்ள ஏரி தொடர்ந்து மாசால் பாதிக்கப்பட்டு வருவதைப் போக்க ஆசைப்பட்டனர். அதையடுத்து அவர்கள் ஏரியைக் காக்கச் சொல்லி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதினர். ஏரிக்கழிவுகள் குறித்து தாங்கள் எழுதிய கடிதத்தை 'டியர் மோடி அங்கிள்' என்று தொடங்கியதாகக் கூறுகின்றனர் மாணவர்கள்.

கடந்த மாதத்தில் பெய்த கனமழையால் தொழிற்சாலை மற்றும் வீட்டுக் கழிவுகள் சேர்ந்து பெங்களூருவில் உள்ள வர்தூர் ஏரி கடுமையாக பாதிக்கப்பட்டது. நாளாக நாளாக அதன் நிலை மோசமாகி வந்தது. அருகிலிருந்த தனியார் பள்ளி இந்திய அறிவியல் கழக (ஐஐஎஸ்) ஆய்வாளர் ராமச்சந்திராவுடன் கைகோர்த்தது. 1998-ல் இருந்து இப்போது வரையான தண்ணீர் தரத்தை அவர் ஆய்வு செய்தார். 445 ஏக்கர் பரப்புள்ள ஏரியில் மொத்த தண்ணீரின் சூழலும் சீரழிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை தூய்மைப்படுத்தவும், ஏரியைக் காக்கவும் முடிவு செய்தனர் பள்ளி மாணவர்கள்.

இது குறித்து மாணவர்கள் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ''சுத்தமான காற்று, தூய்மையான நீர், சுற்றுச்சூழல் ஆகியவை நமது உரிமை. ஆக்கிரமிப்புகளில் இருந்தும், மாசுபாட்டில் இருந்தும் நமது ஏரிகளையும் ஆறுகளையும் பாதுகாக்க வேண்டும். அதேபோல் எங்களின் எதிர்காலத்துக்கு வர்தூரும், பெங்களூருவும் வேண்டும். அதனால் அவற்றைப் பாதுகாக்க இந்த விஷயத்தில் உங்களின் தலையீட்டை எதிர்பார்க்கிறோம்'' என்று கூறியுள்ளனர்.

மாணவர்கள் பிரதமருக்கு அனுப்பிய கடிதங்கள்

கடந்த திங்கட்கிழமையன்று, இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு 1000 அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டன.

மாணவர்கள் அனுப்பிய கடிதம் குறித்துப் பேசிய பள்ளி இணை நிர்வாக அலுவலர் அரிஃபுல்லா கான், ''இந்தக் கடிதங்கள் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வையும், வருங்காலத்தில் கொள்கை வகுப்பாளர்களிடம் தைரியமாகக் கேள்வி எழுப்பவும் உதவும். இக்கடிதங்கள் சுதந்திர தினத்துக்கு முன்னால் பிரதமரை அடையும் என்று நம்புகிறோம்'' என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT