இந்தியா

இரு லஷ்கர் தீவிரவாதிகள் காஷ்மீரில் சுட்டுக்கொலை

பிடிஐ

தெற்கு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நேற்று நடை பெற்ற மோதலில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் சிறுவன் ஒருவனும் உயிரிழந்தான்.

புல்வாமா மாவட்டம், அவந்தி போரா பகுதியில் உள்ள பட்காம் போரா கிராமத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் அப்பகுதியை நேற்று அதிகாலை யில் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அடுத்தடுத்து 2 வீடுகளில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டனர். இதையடுத்து இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் சுமார் 9 மணி நேரம் நீடித்தது.

இதற்கிடையில் தீவிரவாதி ஒருவரின் தாயாரை பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து, அவர் மூலம் தீவிரவாதியை சரண் அடையும்படி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதை யடுத்து தொடர்ந்து நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இவர்களது பெயர் ஜெஹாங்கீர் கனாய் மற்றும் முகம்மது ஷபி ஷெர்குஜ்ரி எனவும் லஷ்கர் தீவிரவாதிகள் எனவும் அடையாளம் காணப்பட்டனர்.

இதனிடையே இரு தரப்பு மோதலில் கழுத்தில் குண்டு பாய்ந்து அமீர் நாசிர் வானி என்ற 15 வயது சிறுவன் உயிரிழந்தான்.

மோதல் நடைபெற்ற இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதாகவும் இதில் இச்சிறுவன் இறந்ததாகவும் உள்ளூர் மக்கள் கூறினர். ஆனால் சிறுவன் தற்செயலாக காயம் அடைந்ததாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

சஜத் அகமது பட் என்ற இளைஞரும் இடுப்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் அடைந்தார். இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே இந்திய ராணுவ செயல்பாடுகளுக்கான தலைமை இயக்குநர் (டிஜிஎம்ஓ) லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.பாட்டியா நேற்று பாகிஸ்தான் டிஜிஎம்ஓ உடன் பேசினார். அப்போது ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதி நெடுகிலும் தீவிரவாதிகள் நடமாட்டம் காணப்படுவது குறித்து இந்தியாவின் கவலையை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT