தலித்துகள் மீதான தாக்குதல் மனிதாபிமானமற்ற செயல் என கண்டனம் தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ் சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்படும் இத்தகைய நபர்கள் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
ஆர்எஸ்எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முற்படுபவர்களை அரசு அடையாளம் கண்டு கவனமாக செயல்பட வேண்டும். சட்டத்தை மீறும் தனி நபர்களையோ அல்லது அமைப்புகளையோ மாநில அரசு நிர்வாகம் தண்டிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் சுரேஷ் பய்யாஜி சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
விஹெச்பி எதிர்ப்பு
பிரதமர் மோடியின் கருத்து குறித்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் பொதுச் செயலாளர் சுரேந்திரா ஜெயின், "தலித்துகள் மீதான தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், பசுக்களை பாதுகாப்பது என்பது நீண்ட காலமாக செய்யப்பட்டு வருகிறது. அப்பணியை எப்போதும் போல் தொடர வேண்டும்" என்றார்.
இந்து மகாசபா அமைப்பு மோடியை கடுமையாக விமர்சித்துள்ளது. மோடி ஓர் 'இந்து விரோதி' எனத் தெரிவித்துள்ளது.
மோடியின் பேச்சு:
''உண்மையான பசு பாதுகாவலர்களுக்கு நாம் மதிப்பும் மரியாதையும் அளிக்க வேண்டும். ஆனால் சிலர் பசுக்களை பாதுகாப்பதாகக் கூறி வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்மூலம் சமூகத்தில் பிரிவினை, பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தகைய போலி பாதுகாவலர்களிடம் நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமது நகரங்கள், கிராமங்களில் அவர்கள் வன்முறையில் ஈடுபட முயன்றால் தடுத்து நிறுத்த வேண்டும். போலி பாதுகாவலர்கள் மீது அந்தந்த மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து தண்டிக்க வேண்டும்'' என்று அண்மையில் தெலங்கானாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மோடி கூறியிருந்தார்.