கடந்த 2012, டிசம்பர் 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை, தெற்கு டெல்லியின் சாக்கேத் பகுதியில் உள்ள ‘மால்’ ஒன்றில் நிர்பயா தனது ஆண் நண்பர் அர்விந்த் பிரதாப் பாண்டேவுடன் திரைப்படம் பார்த்தார். பிறகு மாலில் இருந்து அருகிலுள்ள முனீர்கா பகுதிக்கு வந்த இவர்கள், சொற்ப பயணிகளுடன் வந்த ஒரு தனியார் பேருந்தில் இரவு 9.30-க்கு ஏறினர்.
அடுத்த நிறுத்தத்தில் சிலர் இறங்கிவிட்டதால் பேருந்தில் நிர்பயா, அர்விந்த் தவிர ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 6 பேர் மட்டுமே இருந்தனர். இவர்கள் நிர்பயாவை சீண்ட, இருதரப்பிலும் கடும் வாக்குவாதம் மூண்டது. இதில் அர்விந்தை இரும்புத் தடியால் தாக்கி காயப்படுத்தினர். பிறகு ஓட்டுநர் இருக்கை அருகேயுள்ள கேபினில் நிர்பயாவை பலாத்காரம் செய்தனர். சுமார் 30 கி.மீ. தூர பயணத்தில் அரங்கேறிய பயங்கரத்திற்கு பிறகு, நிர்பயா, அர்விந்த் இருவரையும் இரவு 10.45 மணிக்கு வெளியே வீசினர். போலீஸார், இருவரையும் மீட்டு அருகிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த கோர சம்பவத்தில் குற்றவாளிகளில் இருவர் மட்டும் மறுநாள் மாலை கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை கைது செய்வதில் போலீஸார் சுணக்கம் காட்டினர். இது செவ்வாய்க்கிழமை நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக வெளியாக, டெல்லியில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. டெல்லியின் முக்கிய சாலைகளில் சிறு, சிறு கும்பலாக கிளம்பிய மாணவர்களுடன் பொதுமக்களும் சேர்ந்தனர். இந்தியா கேட் பகுதி இவர் களின் போராட்டக்களம் ஆனது. இவர்களை சமாளிக்க போலீஸார் திணறினர். அதே நாளில் நாடாளு மன்றத்திலும் இந்தப்பிரச்சினை எழுப்பப்பட்டு குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டணை அளிக்கக் கோரப்பட்டது.
போராட்டத்தின் இரண்டாவது நாளில் கலவரம் ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டு வீசியும் இதை கலைக்க வேண்டியதாயிற்று. அப்போதைய டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லங்கள் முன்பும் குடியரசுத் தலைவர் மாளிகை முன்பும் ஆவேசப் போராட்டம் தொடர்ந்தது. எனவே படுவேகமாக செயல்பட்ட டெல்லி போலீஸார், எஞ்சிய 4 குற்றவாளிகளையும் கைது செய்தனர்.
போராட்டம் காரணமாக 9 மெட்ரோ ரயில் நிலையங்கள் 2 நாட்களுக்கு மூடப்பட்டதுடன் அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. மக்கள் அமைதிகாக்கும்படி அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தொலை க்காட்சியில் கோரிக்கை வைக்க வேண்டியதாயிற்று.
பாலியல் வழக்குகள் குறித்த சட்டங்களை கடுமையாக்கினால் மட்டுமே இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும் என பரவலான கருத்து எழுந்தது. டெல்லி மட்டுமின்றி, நாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் போராட்டம் நடைபெற்றது. எவருடைய தலைமையும் இன்றி, முழுக்க மக்களால் நடைபெற்ற முதல் போராட்டமாக அது இருந்தது. டெல்லியில் போராடும் மக்களுக்காக ராம் லீலா மைதானத்தை அரசு ஒதுக்கியது. இங்கு சமூக விரோதிகள் சிலர் ஊடுருவியதால் எழுந்த மோதலில் 80-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதற்கிடையே, சப்தர்ஜங் மருத்துவமனையில் நிர்பயா வுக்கு தீவிர சிகிச்சையளிக்கப் பட்டது. 5 முறை கோமா நிலைக்கு சென்று திரும்பிய அவர் மன உறுதியுடன் இருந்தார். தான் உயிருடன் இருந்தால்தான் குற்றவாளிகளை தண்டிக்க முடியும் என நினைத்தவர், ஒரு முறை நினைவு திரும்பியபோது, ‘அம்மா…! நான் வாழ விரும்புகிறேன்!’ என ஒரு பேப்பரில் எழுதிக் காட்டினார். பிறகு சிங்கப்பூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அரசு செலவில் அனுப்பப்பட்ட நிர்பயா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நிர்பயா பற்றி பிபிசி நிறுவனம் சார்பில் பிரிட்டிஷ் தயாரிப்பாளர் ‘இந்தியாவின் புதல்வி’ என்ற பெயரில் ஆவணப்படம் தயாரித்தார். இதில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ்சிங் அளித்த பேட்டியில் பெண்களுக்கு எதிராக கூறிய கருத்து சர்ச்சையானது. இதனால் இந்தியாவில் இணையதளங்கள் உட்பட எங்கும் பார்க்க முடியாதபடி அப்படம் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.