இந்தியா

வரி ஏய்ப்பு, ஊழல், கறுப்புப் பணத்தைத் தடுப்பதற்கு பண மதிப்பு நீக்க நடவடிக்கை சரியான நேரத்தில் எடுக்கப்பட்டது: மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம்

செய்திப்பிரிவு

வரி ஏய்ப்பு, ஊழல், கறுப்புப் பணத்தை தடுப்பதற்காக, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவுதான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31-ம் தேதி கூடியது. இந்த ஆண்டின் முதல் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். மறு நாள் பிப்ரவரி 1-ம் தேதி 2017-18 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான துல்லிய தாக்குதல், மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டம், வேளாண்மை மற்றும் எஸ்.சி. பிரிவினருக்கான நிதி ஒதுக்கீடு பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவை அனைத்துக்கும் பிரதமர் மோடி பதில் அளித்துப் பேசினார்.

சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்த பதில் உரையின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறுக்கிட்டு பண மதிப்பு நீக்க விவகாரத்தை எழுப்பி கோஷமிட்டனர். அப்போது இதுகுறித்து அவர் பேசியதாவது:

இந்திய பொருளாதாரம் சீரான வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும்போது பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன் என்று சிலர் கேள்வி எழுப்பினர். இது சரியானநேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை ஆகும். பொருளாதார நிலை வலிமையாக இருக்கும்போதுதான் இந்த நடவடிக்கையை எடுக்க முடியும். பலவீனமாக இருக்கும்போது எடுத்திருந்தால் அது வெற்றி பெற்றிருக்காது.உதாரணமாக, ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்பாக, அவரது உடல்நிலைசீராக உள்ளதா என்பதை மருத்துவர்கள்சோதனை செய்வர். சில அளவுகோல்கள்சரியாக இருந்தால்தான் சிகிச்சை மேற்கொள்வார்கள்.

அதுபோல்தான் இந்த நடவடிக்கையும்.அரசியல் சுயலாபத்தை கருத்தில் கொண்டு அவசரகதியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிலர் குறை கூறுகின்றனர். இது தவறு. ஏழைகளின் நலனை கருத்தில் கொண்டு நன்கு திட்டமிட்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பொதுமக்களுக்கு அதிக சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக, வர்த்தகம் உச்சத்தில் இருக்கும் பண்டிகை (தீபாவளி) முடிந்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதேநேரம் இதனால் 20 நாட்களுக்கு சிரமம் இருக்கும் என்பதும் 50 நாட்களுக்குப் பிறகு இயல்புநிலை திரும்பும் என்பதும் முன்கூட்டியே எனக்கு தெரியும்.

இந்த நடவடிக்கைக்குப் பிறகு சுமார் 150 முறைவிதிமுறைகள் மாற்றிக் கொண்டே இருந்ததாக சிலர் குறை கூறுகின்றனர். மக்களின் பிரச்சினைகளை படிப்படியாகக் குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையால் என்ன பயன் என்று சிலர் கேட்கிறார்கள். யார் யார் எவ்வளவு பணம் எங்கு டெபாசிட் செய்தார்கள் என்ற விவரம் பதிவாகி உள்ளது. இதன் அடிப்படையில், வருமான வரித் துறைக்கு முறையான கணக்கு தாக்கல் செய்யாமல் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, இனியாவது அனைவரும் முறையாக வருமான கணக்கை தாக்கல் செய்து நாட்டின் வளர்ச்சிக்கும் ஏழைகளின் முன்னேற்றத்துக்கும் உதவ முன்வர வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தைப் போல, நாட்டின் பொருளாதாரத்தை தூய்மையாக்க இந்த நடவடிக்கை உதவும் என நம்புகிறேன். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் கறுப்புப் பணத்தை தடுப்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, வெளிநாடுகளில் இந்தியர்களால் பதுக்கப்பட்டுள்ள பணத்தை மீட்பது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

இதுபோல பினாமி, ரியல் எஸ்டேட் மசோதாக்கள் கடுமையாக்கப்பட்டன. ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்க பரிமாற்றத்துக்கு பான் எண் கட்டாய மாக்கப்பட்டது. இந்த வரிசையில் பணமதிப்பு நீக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டது. இவையெல்லாம் அரசியல் லாபத்துக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை எனகருதினால், முந்தைய ஆட்சியாளர்களும் (காங்கிரஸ்) இதைச் செய்திருக்கலாமே.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட ஊழல்களில் அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பது பற்றி விவாதம் நடைபெற்றது.

இப்போது, மோடி எவ்வளவு கறுப்புப்பணத்தை மீட்டார் என்று விவாதம்நடைபெறுகிறது. இதன்மூலம் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை சரியானதுதான் என்ற மன நிறைவு ஏற்படுகிறது.

துல்லிய தாக்குதல்

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது நமது ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது மிகவும் தைரியமான முடிவு. இதை முதல் 24 மணி நேரத்தில் பாராட்டிய எதிர்க்கட்சிகள் பின்னர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர். மிகவும் சக்தி வாய்ந்த நமது ராணுவத்துக்கு நாட்டை பாதுகாக்கும் திறன் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிலநடுக்கம் நிகழ்ந்தது

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு எதிராகபல்வேறு புகார்களை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறினார். இதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அதைநாடாளுமன்றத்தில் வெளியிட்டால் நிலநடுக்கம் வெடிக்கும் என்றும் அப்போது கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வட இந்தியாவின் சில பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த இரண்டு நிகழ்வையும் பிரதமர் மோடி நேற்று மறைமுகமாக ஒப்பிட்டுப் பேசினார்.

இதுகுறித்து மோடி கூறும்போது, “இறுதியாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது எப்படி நிகழ்ந்தது என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இது தொடர்பான எச்சரிக்கையை சிலமாதங்களுக்கு முன்பே நான் கேட்டேன். நிலநடுக்கத்துக்கு பிந்தைய நிகழ்வுகளை கவனித்து வருகிறேன். ஊழலை பொறுத்துக்கொள்ள முடியாமல் பூமி அன்னை கடும் கோபமடைந்ததே இதற்குக் காரணம் என நினைக்கிறேன்” என்றார்.

மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர்அருண் ஜேட்லி பேசும்போது, “பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே தொடர் ஆலோசனை நடைபெற்றது. ரிசர்வ்வங்கி வாரியத்தின் 10 உறுப்பினர்களில் 8 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் பணமதிப்பு நீக்கம் தொடர்பாக இறுதி முடிவு எட்டப்பட்டது. இதுகுறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில்தான் நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டது" என்றார்

SCROLL FOR NEXT