உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் 3 பேர் பற்றி, முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு சொன்ன புகார் மீது சிபிஐ விசாரணை கோரி பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு. தற்போது பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தலைவராக இருக்கிறார். இவர் தனது இணையதள பிளாக்கில் பல தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்ட போது, அது பற்றி உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகள் லஹோதி, ஒய்.கே.சபர்வால் மற்றும் கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோர் அவரை பதவியில் நீடிக்க அனுமதித்தனர். அப்போது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிர்பந்தத்தின் பேரில் ஊழல் குற்றம்சாட்டப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பதவியில் நீடிக்கும் வகையில் நடந்து கொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மீது ஐ.பி. புலனாய்வு அமைப்பு பல்வேறு ஊழல் புகார்கள் குறித்த அறிக்கை அளித்த பிறகும், அரசியல் நிர்பந்தங்கள் காரணமாக அவர் பதவியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டார் என்று கட்ஜு கூறியிருந்தார்.
இதையடுத்து, கட்ஜு சொன்ன புகார்கள் மீது சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, வழக்கறிஞர் ஆர்.பி.லுத்ரா என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை, தலைமை நீதிபதி ஜி.ரோஹிணி மற்றும் நீதிபதி ராஜீவ் சஹாய் என்ட்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
விசாரணையின் போது ஆஜரான வழக்கறிஞர் லுத்ரா கூறுகையில், ‘சட்டத்தின் பெருமை காப்பாற்றப்பட வேண்டும். தனிப்பட்ட எந்த ஒரு நீதிபதிக்கு எதிராகவும் நான் இந்த மனுவை தாக்கல் செய்யவில்லை. முன்னாள் நீதிபதி கட்ஜு தனது பிளாக்கில் கூறிய புகார்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன்’ என்றார். அத்துடன் கட்ஜு தனது பிளாக்கில் கூறிய சில வரிகளைப் நீதிமன்றத்தில் படித்துக் காட்டினார்.
நீண்ட விசாரணைக்குப் பின், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.