டெல்லியில் ரயில் பாதைகளுக்கு இடையே ‘செல்பி’ எடுக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக பலியாயினர்.
டெல்லியின் கிழக்குப் பகுதி யைச் சேர்ந்த யாஷ் குமார் (16), சுபம் (14) ஆகிய இருவரும் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் உட்பட 5 நண்பர்களுக்கு ‘மாடலிங்’ செய்வதில் அதிக ஆர்வம் இருந் துள்ளது. இதற்காக, வித்தியாசமான கோணங்களில் செல்பி படங்கள் எடுக்க முடிவு செய்தனர்.
இதற்காக டி.எஸ்.எல்.ஆர். கேமராவை வாடகைக்கு எடுத்துக் கொண்டு கடந்த சனிக்கிழமை ஆனந்த்விஹார் ரயில் நிலையம் சென்றுள்ளனர். அங்குள்ள இரு ரயில் பாதைகளுக்கு இடையே நின்றபடி தங்களுக்கு பின்னால் ரயில் வரும்போது செல்பி எடுக்க திட்டமிட்டிருந்தனர். இது பார்ப்பவர்களுக்கு ஓடும் ரயிலின் முன்பாக நின்று எடுத்த ஆபத்தான படமாக தெரியும்.
இதன்படி, அவர்கள் பின்புறம் ரயில் வந்தபோது செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்புறம் வந்த ரயிலை அவர்கள் கவனிக்கவில்லை. இதை கடைசி நேரத்தில் கவனித்த யாஷ் மற்றும் சுபம் இருவரும் பயந்து விட்டனர். இதனால் இருவரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் எதிர்புறம் வந்த ரயிலில் நசுங்கி இருவரும் பரிதாபமாக இறந்தனர். இவர்களுடன் வந்த மற்ற நண்பர்கள் நின்ற இடத்திலேயே இருந்ததால் எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பினர்.
இதுகுறித்து ஆனந்த்விஹார் ரயில் நிலைய போலீஸார் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘ரயில் நிலையத்துக்கு வருவதற்கு முன்பு இந்த சிறுவர்கள் அங்குள்ள அக் ஷர்தாம் கோயில் முன்பு செல்பி எடுத்துள்ளனர். இதில் திருப்தி ஏற்படாததால், ரயில்களுக்கு இடையே நின்றபடி செல்பி எடுக்கலாம் என யாஷ் மற்றும் சுபம் ஆகியோர் யோசனை கூறியுள்ளனர். இங்கு இது விபரீதமாக முடிந்துள்ளது. யாஷ் 10-ம் வகுப்பில் முதல் ரேங்க் எடுப்பவர். மேலும் இதுவரை வீட்டுக்குள் தனது சகோதரியுடன் செல்பி எடுத்து வந்த இவர் முதன்முறையாக வெளியே வந்து செல்பி எடுத்தபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது” என்றனர்.