இந்தியா

விசா ரத்தாகும்: சுஷ்மா எச்சரிக்கைக்குப் பிறகு மூவர்ண மிதியடிகளை திரும்பப்பெற்ற அமேசான்

கலோல் பட்டாச்சார்ஜி

இந்திய தேசியக்கொடியை அவமதிக்கும் விதமாக மூவர்ணம் அடங்கிய மிதியடிகளைத் திரும்பப் பெறாவிட்டால் அமேசான் ஊழியர்களுக்கு இந்திய விசா வழங்கப்படாது என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து அந்நிறுவனம் அவற்றை ஆன்லைனில் இருந்து திரும்பப் பெற்றது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இத்தகவலை இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்துள்ளது.

உலகளாவிய அளவில் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களில் முன்னிலை வகித்து வரும் நிறுவனம் அமேசான். இந்நிறுவனம், இந்திய தேசியக் கொடியில் உள்ள மூவர்ணங்கள் அடங்கிய மிதியடிகளை விற்பனை செய்து வருவதாகப் புகார் எழுந்தது.

இது தொடர்பான புகைப்படங்களைப் பொதுமக்கள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த சுஷ்மா, ''அமேசான் நிறுவனம் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோர வேண்டும். இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் அனைத்துப் பொருட்களையும் திரும்பப் பெற வேண்டும்.

இல்லையெனில் அமேசான் அதிகாரிகளுக்கு இந்திய விசா அளிக்கப்பட மாட்டாது. ஏற்கெனவே அளிக்கப்பட்டிருக்கும் விசாக்களும் ரத்து செய்யப்படும்'' என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அமேசான் நிறுவனம் மூவர்ணம் கொண்ட மிதியடிகளையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் அவற்றை விற்கவில்லை என்றும், கனடாவில் மட்டுமே அவை விற்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. எனினும் கனடா விற்பனையையும் நிறுத்திக் கொண்டதாக தெரிவித்திருக்கிறது அமேசான்.

கடந்த வருடம் அமேசான் நிறுவனம், இந்து மத தெய்வங்கள் பதிக்கப்பட்ட மிதியடிகளையும், இஸ்லாமிய பதிப்புகள் அடங்கிய மிதியடிகளையும் வெளியிட்டு, கடும் எதிர்ப்புக்குப் பிறகு அவற்றை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT