ரயில்வே பாதுகாப்பு படை(ஆர்பிஎஃப்) பிரிவில் கான்ஸ்டபிள் நியமனத்தில் 50 சதவீதம் பெண்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ரயில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பதிலில் கூறியதாவது:
ரயில்வே துறையில் தற்போது 2.25 சதவீதம் பெண் கான்ஸ்டபிள் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த ரயில்வேயில் கணக்கிடும்போது பெண்களின் பங்கு குறைவுதான். இதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி அறிவுறுத்தலின்பெயரில் கூடுதல் பெண் கான்ஸ்டபிள் நியமிக்கப்பட உள்ளனர்.
9 ஆயிரம் கான்ஸ்டபிள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதில் 50 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். அதாவது 4,500 கான்ஸ்டபிள்கள் பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
பிஹார் அரசில் பெண்களுக்கு அரசுவேலைவாய்ப்பில் 35 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி இருப்பதுபோன்று மத்திய அரசில் எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக ரயில்வே துறையில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் விஷயத்தில் ஜிஆர்பி போலீஸாருடன் இணைந்து ஆர்பிஎஃப் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள்.
2018-ம் ஆண்டில் 8 ஆயிரத்து 619 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 1,120 பெண்கள் நியமிக்கப்பட்டனர். துணை ஆய்வாளர்களாக 4,216 காலிப்பணியிடங்களில் 201 இடங்களில் பெண்கள் நியமிக்கப்பட்டனர்.
இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.