காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இன்று மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், கோஷ்மீர் பிரச்சினைக்கு நேரு கால தவறுகளே காரணம் என குற்றம்சாட்டினார்.
ஜம்மு காஷ்மீரில் ஜூலை மாதம் 3-ம் தேதி முடிவுக்கு வரும்நிலையில், மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்கும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர் கூறுகையில் ‘‘அங்கு தற்போது சட்டம் - ஒழுங்கு நிலைமை மேம்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் தீவிரவாதம் குறைந்துள்ளது’’ என்றார்.
காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியை நீட்டிக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி எம்.பி. பிரேம சந்திரன் கூறுகையில் ‘‘காஷ்மீரில் கொல்லைப்புறம் வழியாக ஆட்சி நடத்தவே மத்திய அரசு முயலுகிறது’’ என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி கூறுகையில் ‘‘மத்திய அரசுக்கு காஷ்மீர் மண்ணை பற்றி மட்டுமே கவலை இருக்கிறது. அங்கு வசிக்கும் மக்களை பற்றி எந்த கவலையும் இல்லை’’ எனக் கூறினார்.
இதைத்தொடர்ந்து காஷ்மீரைச் சேர்ந்த தேசிய மாநாட்டுக் கட்சித் எம்.பி மசூதி கூறுகையில் ‘‘மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பளிக்க படவில்லை. அங்கு ஜனநாயக ரீதியில் ஒரு அரசு அமைய வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர்’’ என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய காஷ்மீரைச் சேர்ந்த எம்.பி.யும், மத்திய அமைச்சருமான ஜிதேந்திர சிங் கூறுகையில் ‘‘கடந்த 1947-ம் ஆண்டு முதலே காஷ்மீரில் பிரச்சினை தொடர்பாக பல வரலாற்று சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த மாநிலத்தின் தற்போதைய நிலைக்கு நேரு காலத்தில் நடந்த தவறுகளே காரணம்’’ எனக் கூறினார்.
அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையில் கோஷம் எழுப்பினர். எனினும் ஜிதேந்திர சிங் தொடர்ந்து பேசினார். அவர் பேசுகையில் ‘‘மக்கள் ஜனநாயக கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்தது தேர்தல் முடிவு காரணமாகவே. இருகட்சிகளுக்கும் வெவ்வேறு கொள்கை உண்டு. இந்த அரசு தொடர்ந்து நீடிக்காமல் போனது எதிர்பார்த்த ஒன்றே’’ எனக் கூறினார்.
பின்னர் பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசுகையில் ‘‘காஷ்மீரில் சட்டம் - ஒழுங்கு சீராகி வருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகிறார். ஆனால் அங்கு அமைதியை கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அவர் கூறவில்லை. அமைதி பேச்சுவார்த்தைக்கு
ஹூரியத் மாநாட்டு கட்சி தயாராக இருந்தபோதும் மத்திய அரசு புறக்கணிப்பது ஏன். பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என தொடர்ந்து அங்கு உயிர் பலி ஏன் நடக்கிறது’’ என அவர் கேள்வி எழுப்பினார்.