மும்பையில் வாடகை கார் ஓட்டுநரான முஸ்லிம் ஒருவரை ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட வலியுறுத்தி தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
நேற்று வியாழக்கிழமை நடந்த இச்சம்பவத்தில் மூன்று பேரும் தாக்குதலில் ஈடுபட்டதும் சிசிடிவி கேமரா உதவியோடு கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் தெரிவிக்கையில், ‘‘பாதிக்கப்பட்ட ஃபாய்சல் உஸ்மான் கான் ஏற்கெனவே உடல்நிலை குன்றியிருந்தார். அவரிடம் இம்மூவரும் மிகவும் தவறாக நடந்துகொண்டனர்.
தாக்குதலுக்கு ஆளான கான் (25), சாலையில் கார் ஓட்டிச் சென்றுகொண்டிருக்கும்போது இம்மூவரும் சென்ற இருசக்கர வாகனத்திற்கு பக்கவாட்டில் வழிவிடாமல் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து கான் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் கடந்த 23ந் தேதி அதிகாலை 3 மணியளவில் நடந்தது’’ என்றார்.
பாதிக்கப்பட்ட கான், தான் மும்பராவில் வசித்துவருவதாக போலீசாரிடம் தெரிவித்திருந்தார். பைக்கில் வந்த மூவரும் தனது காரை வழிமறித்து தன்னை ஜெய்ஸ்ரீராம் கோஷமிடச் சொல்லி வற்புறுத்தியதாகவும் மறுத்தநிலையில் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கான் கூறினார்.
தாக்குதலில் ஈடுபட்ட மூவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.