ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்க வகை செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்கு சட்டம் - ஒழுங்கு நிலைமை சீரடைந்து வருவதால் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உறுதி அளித்தார். ஆனால் இந்த தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
காஷ்மீரில் மெஹ்பூபா முப்தி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டதையடுத்து 2018, ஜூன் மாதத்தில் 6 மாதகால ஆளுநர் ஆட்சி அங்கு அமல்படுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரைப் பொறுத்தவரை இது கட்டாயமான சட்டவிதியாகும்.
இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று அறிக்கை அளித்ததையடுத்து டிசம்பர் 17-ல் மத்திய அமைச்சரவை இந்த முடிவை எடுத்தது. டிசம்பர் 19 நள்ளிரவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது.
இது ஜூலை மாதம் 3-ம் தேதி முடிவுக்கு வரும்நிலையில், மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்க ஆளுநர் சத்யபால் மாலிக் மத்திய அமைச்சரவைக்குப் பரிந்துரைத்தார். அவரின் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் ஆட்சிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என்பதால் இதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:
காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிக்க வேண்டிய தேவை இருப்பதால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு தற்போது சட்டம் - ஒழுங்கு நிலைமை மேம்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் தீவிரவாதம் குறைந்துள்ளது. தீவிரவாதிகள் தனிமைபடுத்தப்பட்டு வருகின்றனர். அங்கு 6 மாதங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். அதற்கான சூழலை உருவாக்கி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி எம்.பி. பிரேம சந்திரன் கூறுகையில் ‘‘காஷ்மீரில் கொல்லைப்புறம் வழியாக ஆட்சி நடத்தவே மத்திய அரசு முயலுகிறது. அங்கு மாற்று அரசு அமைக்க மக்கள் ஜனநாயக கூட்டணிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முன் வந்தன. ஆனால் புதிய அரசு அமைக்க மத்திய அனுமதிக்கவில்லை. தற்போது தேர்தல் நடத்தாமல் மேலும் 6 மாதங்கள் காலதாமதம் செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது’’ என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி கூறுகையில் ‘‘மத்திய அரசுக்கு காஷ்மீர் மண்ணை பற்றி மட்டுமே கவலை இருக்கிறது. அங்கு வசிக்கும் மக்களை பற்றி எந்த கவலையும் இல்லை. தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மத்திய அரசு ஆபத்தான முறையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மக்களுக்கு பாதிப்பாகவே அமையும்’’ எனக் கூறினார்.