கேரளாவில் ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்குக் குறைவான ஓட்டல்களில் செயல்பட்டு வரும் பாருடன் கூடிய மதுக்கடைகளை மூடும் மாநில அரசின் உத்தரவுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கேரளாவில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த அம்மாநில அரசு முடிவெடுத் துள்ளது. முதல்கட்டமாக, ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்குக் குறைவான ஓட்டல்களில் செயல் பட்டு வரும் சிறு மது விற்பனை பார்களுக்கான உரிமம் ரத்து செய்யப்படுவதாக அறிவித் துள்ளது. இதன்மூலம் 730 மது விற்பனை பார்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருவதாக இருந்தது.
கேரள அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, சிறு ஓட்டல்களில் உள்ள மது விற்பனை பார் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் அனில் தவே, உதய் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மது விற்பனை பார் உரிமை யாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், “கேரளாவில் விற்பனையாகும் மது வகைகளில் 80 சதவீதம் சிறு விற்பனை கடைகளில் விற்பனை யாகிறது. இந்நிலையில் மது விற்பனை அளவை குறைக்காமல், சிறு விற்பனை கடைகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. இதனால் பெரிய ஓட்டல்களில் விற்பனை அதிகரிக்க வசதி செய் யப்பட்டுள்ளது. இது பாரபட்சமான முடிவு” என்று வாதிட்டார்.
கேரள அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “நாட்டில் மது விற்பனை அதிகமாக நடைபெறும் மாநிலமாக கேரளா உள்ளது. ஏராளமான இளைஞர்கள் குடிப் பழக்கத்துக்கு ஆளாவதால், சமூக நலன் கருதி கேரள அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று வாதிட்டார்.
குஜராத்தை பின்பற்றலாமே?
அப்போது நீதிபதிகள், “சமூக நலன் கருதி மதுக்கடைகளை மூடுவது என்றால், நாளைக்கே அனைத்து மதுக் கடைகளையும் மூடுங்கள். குஜராத் மாநிலத்தில் இருப்பதைப் போல், பூரண மதுவிலக்கு கொண்டு வரலாமே? அதை விடுத்து பணக்காரர்கள் செல்லும் ஓட்டல்களை மட்டும் அனுமதித்துவிட்டு சிறு விற்பனை கடைகளை எப்படி மூடலாம்?” என்று கேள்வி எழுப்பினார்.
வழக்கறிஞர் ராஜீவ் தவான், “மது விற்பனை கடைகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள உரிமம் 2015-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி காலாவதி ஆகிறது. அதற்கு முன்பாக உரிமத்தை தன்னிச்சையாக ரத்து செய்வது சட்ட விரோதம்” என்று வாதிட்டார்.
அதற்கு பதிலளித்த கபில் சிபல், “மது விற்பனை, நடன அனுமதி போன்றவற்றுக்கான உரிமம் வழங்கும்போது, எப்போது வேண்டுமானாலும் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற பிரிவும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, கேரள அரசின் முடிவில் எந்தத் தவறும் இல்லை. இதுதொடர்பான வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அங்கு முடிவு செய்யும் முன்பு தடை விதிக்க கூடாது” என்று வாதிட்டார்.
இந்த வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் வரும் 18-ம் தேதி விசாரணைக்கு வருவதால், அங்கு வாதிடும்படி தெரிவித்த நீதிபதிகள், செப்டம்பர் 30-ம் தேதி வரை தற்போதைய நிலை தொடரும் என உத்தரவிட்டனர். இதனால் கேரளாவில் மதுக்கடைகள் எப்போதும் போல் இயங்க வழி ஏற்பட்டுள்ளது.