இந்தியா

இந்திய-ஜப்பான் ராணுவக் கூட்டுறவு வலுப்படுத்தப்பட உள்ளது

செய்திப்பிரிவு

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ ஆபேயைச் சந்தித்துப் பேசுகையில் இருநாடுகளும் இடையேயான ராணுவ ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படுவதற்கான முடிவு எட்டப்பட்டது.

"இருநாட்டு பிரதமர்களும் ராணுவ உறவுகளின் முக்கியத்துவம் குறித்து மீண்டும் பேசி முடிவுக்கு வந்தனர். அதில் இரு நாடுகளுக்குமிடையேயான ராணுவ உறவுகளை வலுப்படுத்தும் முடிவு எட்டப்பட்டது” என்று பேச்சு வார்த்தைகளின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறையில் இருநாடுகளும் கூட்டுறவு மற்றும் பரிமாற்றங்களுக்கான தீர்மானத்தில் கையெழுத்திட்டன.

“அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான இருநாடுகளின் நலன் குறித்த அக்கறையைக் கருத்தில் கொண்டு, இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்புக்கு புதிய கோணத்தையும், புதிய உந்துசக்தியையும் வழங்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். ராணுவத் தொழில்நுட்பம், மற்றும் தளவாடம் ஆகிய பிரிவுகளில் கூட்டுறவு வலுப்படுத்தப்படும்.

மேலும் உயர் தொழில்நுட்பம், விஞ்ஞானத் தொழில்நுட்பம் ஆகியவற்றிலும் இருநாடுகளிடையே ஒத்துழைப்பை மேலும் விரிவு படுத்த தீர்மானித்துள்ளோம். மேலும் இரு நாட்டு மக்களுக்கிடையேயான உறவுகள், கல்வித்துறை சார்ந்த பரிவர்த்தனைகள் அகியவற்றிலும் கூட்டுறவை வலுப்படுத்த முடிவு எட்டப்பட்டுள்ளது” என்று நரேந்திர மோடி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் இருநாட்டு கப்பற்படை பயிற்சிப் பரிவர்தனைகளையும் வலியுறுத்தினார் நரேந்திர மோடி.

SCROLL FOR NEXT