ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையர் மற்றும் கண்காணிப்பு ஆணையர்கள் தேர்வில் அரசு ஏன் வெளிப்படைத் தன்மை காட்டுவதில்லை என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பொதுநல மனு ஒன்றை விசாரித்த தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு, மத்திய அரசு இது குறித்து அக்டோபர் 9-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டது.
இந்த நீதிபதிகள் அமர்வில் நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் ஆர்.எஃப்.நரிமன் ஆகியோரும் இருந்தனர். இவர்கள் கூறும்போது, “நாட்டில் திறமையானவர்கள் நிறைய பேர் உள்ளனர். எதிலும் வெளிப்படைத் தன்மையை மக்கள் எதிர்பார்க்கின்றனர். திறமையானோரை சென்றடைய முடியாத ஒரு தேர்வு முறையை ஏன் கடைபிடிக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினர்.
"தலைமைக் கண்காணிப்பு ஆணையர் மற்றும் கண்காணிப்பு ஆணையர்கள் நியமனத்தில் வேண்டப்பட்டவர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் போக்கு ஏன்" என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கி, "மத்திய அரசினால் நிறைய பேர் இப்பதவிகளுக்கு பரிசீலனைச் செய்யப்படும் போது விண்ணப்பங்களை வரவேற்க முடியாது. இந்தப் பதவிகளுக்குத் தேர்வு நடத்தி முடிப்பதற்கு ஒருமாத காலம் ஆகும். வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் இறுதி முடிவு எடுக்கப்பட மாட்டாது" என்று உறுதி அளித்தார்.
அட்டர்னி ஜெனரல் மேலும் பணித் தேர்வு முறையை நீதிமன்றத்திடம் விளக்கும்போது, "அமைச்சரவைச் செயலர் மற்றும் 36 பிற செயலர்கள் 120 பேர்களை பதவிக்குப் பரிந்துரை செய்தனர். அதிலிருந்து 20 பெயர்களைப் பரிசீலித்து 5 பெயர்கள் மட்டும் தேர்வுக் கமிட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், "என்ன நடைமுறையில் இவர்கள் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசீலிக்கப்பட்டன என்று ஒவ்வொரு செயலரும் ஒவ்வொரு அளவுகோலை வைத்திருப்பர், இது சரியானதுதானா?” என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் "அதிகாரிகளையே தலைமைக் கண்காணிப்பு ஆணையர் மற்றும் கண்காணிப்பு ஆணையர்கள் பதவிக்கும் தேர்வு செய்வது ஏன்? சாதாரண மக்களை ஏன் பரிசீலிக்கவில்லை?" என்று அவர்கள் வினவினர்.
இதனையடுத்து விசாரணையை அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அக்டோபர் 9-ஆம் தேதிக்குள் மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
என்.ஜி.ஓ தொடர்ந்த பொதுநல மனுவில், கண்காணிப்பு ஆணையர்கள் பொறுப்பிற்கு பெயர்களைப் பரிந்துரை செய்யுமாறு அரசுத்துறை செயலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது என்றும், இதனால் பொதுமக்கள் பார்வைக்கே கொண்டு வராமல் இப்பதவிகளுக்கு நியமனம் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். என்.ஜி.ஓ. தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி வழக்காடினார்.
சட்டம் கூறுவது என்ன?
ஊழல் கண்காணிப்பு ஆணையச் சட்டம், 2013-ன் படி, தலைமை ஆணையர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க பிரதமர், உள்துறை அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட வேண்டும். இக்குழு விண்ணப்பங்கள் பெற்று தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். இத்துறையில் அனுபவம் மிக்கவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். ஒருமனதாக இப்பதவிகளை நிரப்ப வேண்டும். பெரும்பான்மை ஆதரவு அடிப்படையில் இந்த நியமனம் கூடாது என்று சட்டத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.