இந்தியா

சீன அதிபரின் வருகை இந்தியாவுக்கு பலன் தருமா?- முன்னாள் இந்தியத் தூதர் பேட்டி

ஆர்.ஷபிமுன்னா

கடந்த அறுபது ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருகை தரும் மூன்றாவது சீன அதிபர் ஜி ஜின்பிங். இவரைப் பற்றி நன்கு அறிந்தவரும், சீனாவின் இந்திய தூதரகத்தில் உயர் அதிகாரியாக 16 வருடங்கள் பணியாற்றியவருமான டி.சி.ஏ. ரங்காச்சாரி ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்பு பேட்டி.

சீன மொழியில் சரளமாகப் பேசும் தமிழரான இவர், கடைசி யாக, பிரான்ஸுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

ஜி ஜின்பிங்குக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாக கூறப்படுகிறதே?

கடந்த 2012-ல் அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி ஏற்ற ஜி ஜின்பிங், மார்ச் 2013-ல் சீனாவின் அதிபரானார். அதிபராகி அரசை ஆள்வதுடன், கட்சியின் கட்டுப்பாடு மற்றும் மாநிலங்களின் நிர்வாகத்தையும் தன் கைக்குள் கொண்டு வந்து விட்டார். கடந்த 30 வருடங்களுக்கு முன் சீன அதிபராக இருந்த டெங் ஜியோ பிங்கிற்கு பிறகு, சக்தி வாய்ந்த அதிபராக ஜி ஜின்பிங் கருதப்படுகிறார். இவர் கட்சியில் அமைத்த ஒழுங்கு நடவடிக்கை குழுவின் நடவடிக்கைகளில் அவரது மூத்த தலைவர்களையும் சிக்க வைத்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான சீனாவின் ஒரு மாநில முதல்வரையே சிறையில் தள்ளி இருக்கிறார். இந்த செயல்களின் மூலம் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஒழுங்கு மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன் என ஜின்பிங் உணர்த்தியுள்ளார்.

இதை நாம் மோடியின் செயல்பாடுகள் மற்றும் நடவடிக் கைகளுடன் பொருத்திப் பார்த்து ஒற்றுமைகளின் அளவை முடிவு செய்து கொள்ளலாம்.

இவரது வருகை இந்தியாவிற்கு எந்த அளவு பலனைக் கொடுக்கும்?

கண்டிப்பாக நல்ல பலனைக் கொடுக்கும். காரணம், சக்தி வாய்ந்த அதிபரான ஜி எடுக்கும் முடிவுகள், உடனடியாக பலன் தரக் கூடியவை. கடந்த 60 வருடங்களில் நம் நட்டிற்கு பல சீனப் பிரதமர்கள் வந்திருந்தாலும், அதிபர்களின் வருகையில் இவர் மூன்றாவது நபர். அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பெற சீனா விரும்பகிறது.

இதற்காக அவர்கள் அதிகமாக செய்ய விரும்பும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு இந்தியா உகந்த நாடு. இதில், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருளாதாரத்தில் 4.17 டிரில்லியன் டாலர்களுடன் சீனா உலக அளவில் முதலிடம் வகிப்பதை நினைவில் கொள்வது அவசியம்.

மோடியின் சமீபத்திய ஜப்பான் விஜயம், அங்கு அவருக்கு கிடைத்த வரவேற்பு ஆகியவை நம் நாட்டுக்கு, சீனாவுடனான உறவை வளர்க்க தடையாக இருக்குமா?

நிச்சயமாக இருக்காது. ஏனெனில், இந்தியாவை விட ஜப்பானில் பத்து மடங்கு அதிகமான முதலீடுகளை சீனா செய்துள்ளது. இருநாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்சினைகளுடன், முதலீடும் வளரக் காரணம் அவர்கள், எல்லைப் பிரச்சினைகளையும் முதலீடுகளையும் ஒன்றாக இணைத்து பார்ப்பதில்லை.

அப்படியானால், நமக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள எல்லை பிரச்சினைக்கு என்ன தீர்வு?

பல ஆண்டுகளாக நிலவி வரும் இருநாட்டு எல்லை பிரச்சினை ஒரே சந்திப்பில் முடிவுக்கு வர வாய்ப்பு இல்லை. இதற்காக, இருநாடுகளின் அதிகாரிகள் முதல் அதிபர்கள் வரை அமைதி பேச்சு வார்த்தைகள் படிப்படியாக நடைபெற வேண்டும். எனவே, சீன அதிபரின் இந்த விஜயத்தில் எல்லைப் பிரச்சினைகளுக்கு இறுதி தீர்வு வராது எனக் கருதுகிறேன்.

இதனால்தான் ஜின்பிங் இந்திய வருகையின்போதும், சீன இராணுவம் நம் எல்லைகளில் தன் படைகளின் ஊடுருவலை நிறுத்த வில்லை.

ஜின்பிங்கின் விஜயத்துக்கு இங்கு நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்றிருப்பது ஒரு காரணமா?

இது போன்ற உறவுகளுக்கு இரு பெரும் நாடுகள்தான் காரணமே தவிர, அதன் அதிபர்கள் அல்ல. இதில், மோடி பிரதமராக இருக்கும் கட்சியின் தனிப்பெரும் வெற்றி கூடுதல் காரணமாக இருக்கலாம். கடந்த அக்டோபரில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் சீன விஜயத்தில் அவ ருக்கு நல்ல வரவேற்பும் மதிப்பும் அளிக்கப்பட்டது. இந்தியாவில் எந்த கட்சியின் ஆட்சியாக இருந் தாலும் சரி, தம் முதலீடுகளை அதிகரித்து சீனாவின் பொருளாதார வளர்சிக்கு வழி வகுப்பதே அவர்களின் முக்கிய நோக்கம். 1996-ல் முதன்முறையாக சீன அதிபர் ஜியாங் ஜமின் வந்த போது இங்கு பிரதமராக இருந்தவர் தேவகவுடா.

ஜின்பிங்கின் இந்திய வருகையால் இலங்கை தமிழர்களுக்கு எதுவும் பலன் கிடைக்குமா?

பலரும் நினைப்பது போல், சீனா தம் பெரிய அளவிலான ஆதரவை இலங்கைக்கு தருவது கிடையாது. அதேசமயம், விடுதலைப் புலிகளுக்கும் சீன அரசின் எந்த ஆதரவுகளும் கிடைத்ததில்லை. இதை வைத்து பார்க்கும்போது இவரது வருகைக்கும் இலங்கை தமிழர்கள் நலனுக்கும் சம்மந்தம் இருக்க வாய்ப்புகள் இல்லை. இலங்கைக்கு 28 வருடங்களுக்கு பின் சீன அதிபர் இப்போதுதான் சென்றிருக்கிறார்.

ஜின்பிங்கின் வருகையால் இந்தி யாவின் பொருளாதார வளர்ச்சி கூடுமா?

கண்டிப்பாகக் கூடும். சில நாட்களுக்கு முன் இந்தியா வுக்கான சீன தூதர் தங்கள் நாடு இந்தியாவில் நூறு பில்லியன் டாலர்கள் வரை முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகக் கூறி இருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன் 73 பில்லியன் டாலர்களாக இருந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது குறைந்து 65 பில்லியன் டாலர்களாகி விட்டது. இதற்கு நம் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் இரும்பு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது முக்கியக் காரணம். இனி, பிங்கின் வருகையால் புல்லட் ரயில், புதிய தொழில்கள் என சீன முதலீடுகள் அதிகரித்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கூடும் வாய்ப்புகள் அதிகம்.

SCROLL FOR NEXT