தெலங்கானாவில் ஆணவக் கொலை செய்யப்பட்ட பிரனய் குமாரின் மனைவி அம்ருதா வர்ஷினி, நேற்று (திங்கட்கிழமை) ஃபேஸ்புக்கில் 'பிரனய்க்கு நீதி' என்ற பிரச்சார பக்கத்தைத் தொடங்கினார்.
''சமூக அநீதிக்கு எதிராக நான் மேற்கொண்டுள்ள முதல் நடவடிக்கை இது'' என்றார் அம்ருதா.
திங்கட்கிழமை மதியம் அம்ருதா இந்தப் பிரசாரப் பக்கத்தைத் தொடங்கினார். அதில், ''கவலைப்படாதே பிரனய்.. நீ தனியாக இல்லை.. என்னுடன் சேர்ந்து கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் இருக்கிறாய்.. நீதிக்காக ஏராளமான மக்கள் போராடி வருகின்றனர்'' என்று எழுதியிருந்தார்.
இந்தப் பக்கத்தை செவ்வாய்க்கிழமை காலை 10 மணி நிலவரப்படி 64 ஆயிரம் பேர் 'லைக்' செய்துள்ளனர்.
தெலங்கானா மட்டுமல்லாது இந்தியா, உலகம் முழுவதும் உள்ள ஃபேஸ்புக் பயனாளிகள் இப்பக்கத்தைப் பின் தொடர்கின்றனர்.
இந்த ஃபேஸ்புக் பக்கத்தில், தெலங்கானா மாவட்டங்களில் உள்ள ஏராளமானோர் பிரனய்க்கு ஆதரவாக மெழுகுவர்த்தி ஏந்தி வரும் புகைப்படங்களையும், ஆணவக் கொலைக்கு எதிரான பேரணி படங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
முன்னதாக சாதியத்துக்கு எதிராகப் போராடத் தான் பல்வேறு விதமான மக்களைச் சந்திக்க உள்ளதாக அம்ருதா கூறியிருந்தார்.
ட்விட்டரில் #SayNoToCaste என்ற ஹேஷ்டேக் திங்கட்கிழமை மாலை 6 மணி வாக்கில் ட்ரெண்ட் ஆனது.
அதே நேரத்தில் திங்கட்கிழமை மாலையில் 'பிரனய்க்கு நீதி' என்ற பெயரில் அதே புகைப்படத்துடன் பல்வேறு போலியான பக்கங்கள் உருவாக்கப்பட்டன. அதில் பிரனய் குறித்து அவதூறுகள் பரப்பப்பட்டன.