ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாக அறிவித்த உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்து, தேர்தல் நடந்து முடிந்து, புதிய ஆட்சி அமைக்கும் வரை தொடரும் என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.
முன்கூட்டியே தேர்தல் நடத்தும் வகையில் சட்டப்பேரவையின் 5 ஆண்டு பதவிக்காலம் முடியும் முன் கலைத்தால்கூட, கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவுடன் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என்று விளக்கம் அளித்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தின் சட்டப்பேரவைக் காலம் அடுத்த ஆண்டுவரை இருக்கும் நிலையில், முன்கூட்டியே தேர்தலைச் சந்திக்கும் வகையில் சட்டப்பேரவையை கலைப்பதாகக் கடந்த மாதம் முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார். தேர்தல்ஆணையத்தின் இந்த விளக்கத்தைத்தொடர்ந்து அங்குத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
மத்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த 1994-ம் ஆண்டு மத்திய அரசுக்கு எதிராக எஸ்.ஆர் பொம்மை உள்ளிட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் சில அறிவிப்புகளைத் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
இதன்படி, தேர்தல் நடத்தைவிதமுறைகள் நடைமுறைக்கு வந்தபின், காபந்து அரசும், முதல்வரும் அன்றாட அரசுப்பணிகள் நடக்க உதவத்தான் முடியுமேத் தவிர எந்தவிதமான கொள்கை முடிவுகளும், திட்டங்களும், புதிய நடவடிக்கைகளும் எடுக்க முடியாது.
தேர்தல் நடத்தைவிதிமுறை விதிகள் பிரிவு-4ன்படி, ஆட்சியில் இருக்கும் கட்சி அதாவது, காபந்து அரசு அது மாநிலம் அல்லது மத்திய அரசாக இருந்தாலும் இந்த விதிமுறை பொருந்தும்.
அதுமட்டுமல்லாமல், அரசு வாகனங்கள், கருவிகள், அரசின் பணம், வளங்கள், அதிகாரிகள், அரசு ரீதியான பயணம் உள்ளிட்டவற்றை அரசு சாராத பணிகளுக்குப் பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக அரசு முறைப் பயணம் என்று கூறிக்கொண்டு தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்கக் கூடாது. இந்த விதிமுறை மாநிலத்தில் காபந்து முதல்வராக இருப்பவருக்கும் பொருந்தும், மத்தியில் காபந்து பிரதமராக இருப்பவருக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.