இந்திய மாணவர்கள் வானிலை மாற்றம் குறித்த ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
"வானிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிகளுக்கு இந்திய மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை, இந்த அளவுக்கு விஸ்தாரமான ஒரு ஆராய்ச்சி நிச்சயம் பல்கலைக் கழகங்களின் பங்கேற்பை பெரிய அளவுக்கு வலியுறுத்துவதாகும். புவி விஞ்ஞான அமைச்சகம், பல்கலைக் கழகங்கள் இத்தகைய ஆய்வில் பங்கு பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
வானிலை மாற்றம் வெறும் விஞ்ஞான ஆராய்ச்சியின் பிரச்சினை மட்டுமல்ல, இதில், சர்வதேச நாடுகளின் கொள்கை, காப்பீடு, சட்டம், பொருளாதாரம் உள்ளிட்ட பல விஷயங்களை வானிலை மாற்றம் என்ற நிகழ்வு உள்ளடக்கியுள்ளது. நீராதார வறட்சி, உணவுப் பாதுகாப்பு, சுத்தமான காற்று, பொது சுகாதாரம் ஆகியவற்றை புரிந்து கொள்ள வானிலை மாற்றம் என்ற ஆய்வுத்துறை மிக முக்கியமானது. ஆகவே சவால்கள், வாய்ப்புகள், ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த செயல்பாடுகள் குறித்த பொதுப் புரிதலைக் கோருவதாகும்.
மேலும், வெப்பநிலை உயர்வு என்ற ஒன்று மட்டுமே வானிலை மாற்றம் அல்ல. உதாரணமாக பருவ நிலை மற்றும் மழையின் அளவு ஒரு முக்கியக் கூறாகும், நம் நாட்டின் முதுகெலும்பான வேளாண்மை பருவநிலையைப் பொறுத்து அமைவது, ஆகவே ஒரு குறிப்பிட்ட ஆண்டில் பருவமழை எந்த அளவுக்கு பொழியும் என்பதை அறிவது அவசியம்.
மழையின் அளவில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் இல்லை என்றாலும், மண்டலவாரியாக மழையின் அளவு பெரிய அளவு மாறுதல் காட்டுவது பெரிய கவலைக்குரிய விஷயமாகும்” என்று ஐதராபாத்தில் இன்று தொடங்கிய "வானிலை மாற்றம் என்ற விஞ்ஞானம்” என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சிப் பட்டரையில் கஸ்தூரி ரங்கன் தெரிவித்தார்