டெல்லி காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான அஜய் மேகன் கட்சிப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மேகனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறும்போது, ''உடல்நிலை காரணங்களுக்காகவே மேகன் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்துள்ளார். முதுகு வலிக்கு சிகிச்சை எடுப்பதற்காக அவர் வெளிநாடு சென்றுள்ளார். குறிப்பிட்ட காலத்துக்கு அவர் அரசியலில் இருந்து விலகியே இருப்பார்'' என்று தெரிவித்தன.
எனினும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரின் பதவி விலகல் கடிதத்தை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் மேகனை அமர்த்தியது குறிப்பிடத்தக்கது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மியால் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, அர்விந்த் கேஜ்ரிவாலைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தவர் அஜய் மேகன்.
மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்டணி உருவாகும் என்று தொடர்ந்து யூகங்கள் எழுப்பப்படும் நிலையில் மேகனின் பதவி விலகல் முக்கியத்துவம் பெறுகிறது.