ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய ஊழல் கண்காணிப்பு பிரிவின் தலைமை ஆணையர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இம்மனு, தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ஊழல் கண்காணிப்பு ஆணையர் மற்றும் உறுப்பினர்கள் நியமனங்களின் போது வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.
ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனம் தொடர்பாக அக்டோபர் 9-ம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனம் நிறுத்திவைக்கப்படுவதாக அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி உறுதியளித்தார். வழக்கு விசாரணை அக்டோபர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.