இந்தியா

பாரிக்கர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்த மவுலானாக்கள்: கோவாவில் நெகிழ்ச்சி

பிரகாஷ் காமத்

 உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் விரைவில் குணமாக வேண்டி, முஸ்லிம் மவுலானாக்கள் கோவா பாஜக அலுவலகத்தில் சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.

பாஜகவின் சிறுபான்மையின அமைப்பு மேற்கொண்ட முயற்சியை அடுத்து வியாழக்கிழமை அன்று பிரார்த்தனை நடத்தப்பட்டது.

மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்த 10 முஸ்லிம் மவுலானாக்கள், பாரிக்கர் விரைவில் குணமாக வேண்டும் என்று 'குர்ஆன் கவானி' எனப்படும் புனித குர்ஆன் வாசிப்பை நடத்தினர்.

இதுகுறித்துப் பேசிய கோவா சிறுபான்மையினத் தலைவர் ஷேக் ஜினா, ''மவுலானாக்கள் நடத்தும் 'குர்ஆன் கவானி' மூலம் மனோகர் பாரிக்கருக்கு அல்லாவின் அருட்கொடை கிடைக்கும். இதனால் அவர் விரைவில் குணமடைவார்.

முஸ்லிம் சமூகம் சார்ந்த ஏராளமான பிரச்சினைகளை பாரிக்கர் சுமுகமாகத் தீர்த்து வைத்துள்ளார். ஹஜ் பயணத்துக்கு கோவாவை முக்கிய இடமாக மாற்றியது, ஹஜ் இல்லம் கட்டியது, கல்வித் துறையில் முஸ்லிம் சமூகம் சந்தித்த பிரச்சினைகளைத் தீர்த்துவைத்தது ஆகியவற்றைச் சொல்லலாம்'' என்றார்.

கடும் உடல்நலக் குறைவால் அவதிப்படும் பாரிக்கர்

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கணைய அழற்சி காரணமாக, மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பினார். சில நாட்கள் அரசுப் பணிகளைக் கவனித்து வந்த நிலையில் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

அங்கிருந்து நாடு திரும்பிய பாரிக்கர், மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கணைய அழற்சி நோய்க்கு சிகிச்சை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாரிக்கர் குணமாக வேண்டி பல்வேறு கோயில்கள், தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT