இந்தியா

‘‘எவ்வளவு அழகு; ஏன் இந்த பாசாங்கு?’’ - இப்தாரில் பங்கேற்ற தலைவர்களை விமர்சித்த மத்திய அமைச்சரால் சர்ச்சை

செய்திப்பிரிவு

பிஹார் மாநிலத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக கூட்டணி தலைவர்களை கடுமையாக விமர்சித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பிஹார் மாநிலத்தில் 17 இடங்களில் நின்ற பாஜக அனைத்து இடங்களிலும் வென்றது, அதேபோல, நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு கட்சியும் 17 இடங்களில் 16 இடங்களில் வென்றது.

இதனால், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் தங்களுக்கு முக்கியமான துறைகள் கிடைக்கும் என்று நிதிஷ் குமார் எண்ணினார். ஆனால், ஒரு அமைச்சர் பதவி மட்டுமே பாஜக தலைமை ஒதுக்கியது. இதனால் நிதிஷ் குமார் பாஜக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி இடையே மோதல் நடப்பதாக எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதாதளம் தெரிவித்து வருகிறது. இதனால் பாஜக - ஐக்கிய ஜனதாதள கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் உள்ளது.

இந்தநிலையில் பாட்னாவில் நேற்று நடந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், பாஜகவைச் சேர்ந்த துணை முதல்வர் சுஷில் குமார் மோடி உள்ளிட்டப பலரும் கலந்து கொண்டனர். இதில் எதிர் அணியைச் சேர்ந்த சில தலைவர்களும் பங்கேற்றனர்.

பிஹார் மாநிலத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக கூட்டணி தலைவர்களை கடுமையாக விமர்சித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில் ‘‘எவ்வளவு அழகு இந்த படம், நவராத்திரி உணவை இதேபோன்ற ஆர்வத்துடன் ஏற்பாடு செய்வார்களா, சொந்த நம்பிக்கை என்றால் பின் வாங்குகிறார்கள், ஏன் பாசாங்கு காட்டுகிறார்கள்’’ என விமர்சித்துள்ளார்.

இப்தார் நிகழ்ச்சியில் பாஜகவைச் சேர்ந்த துணை முதல்வர் சுஷில் குமார் மோடியும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. கிரிராஜ் சிங்கின் ட்விட்டர் பதிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐக்கிய ஜனதாதள கட்சியின் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் சிங், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி அரசின் 2-வது பதவிக்காலம் தொடங்கி சிறிது காலத்துக்குள்ளாகவே பாஜக தலைவர்கள் தங்கள் பழைய கதையை தொடங்கி விட்டார்கள், இது ஆபத்தானது, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சஞ்சய் சிங் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT