தென் மாநிலங்களில் ஏராளமான மாணவர்கள் இந்தி மொழியை 2-வது பாடமாக எடுத்துப் படிக்கிறார்கள். ஆனால், வடமாநிலங்களில் மாணவர்கள் தமிழ், மலையாளத்தைப் படிக்கிறார்களா என்று மும்மொழிக் கொள்கை குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடியின் முந்தைய ஆட்சியில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகர் உத்தரவின் பெயரில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவின் தலைவராக இருந்த விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தனது அறிக்கையை அரசுக்கு சமீபத்தில் அளித்தார்.
அதில் மும்மொழிக் கொள்கையை மாநிலங்களில் பரிந்துரைத்துள்ள அந்தக் குழு, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியைக் கற்பிக்கவும், இந்தி பேசும் மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து நாட்டின் பிறமொழி ஒன்றைக் கற்பிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தி மொழியைத் தமிழகத்தில் வலிந்து திணிக்கக் கூடாது என்றுகூறி திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர் நேற்று நிருபர்களைச் சந்தித்தார் அப்போது அவரிடம் மும்மொழிக் கொள்கை குறித்தும், பாகிஸ்தான் விவகாரம் குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அவர் கூறியதாவது:
''மும்மொழிக் கொள்கைக்குத் தீர்வு என்பது அந்த ஆலோசனையை முற்றிலும் ஒழித்துவிடுவது தீர்வாகாது. அந்தத் திட்டத்தை எவ்வாறு மாநிலங்களுக்கு ஏற்றவாறு சிறப்பாகச் செயல்படுத்துவது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
மும்மொழிக் கொள்கை என்பது இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்படவில்லை. கடந்த 1960களில் இந்தக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அது முறையாக மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப்படவில்லை.
தென் மாநிலங்களில் உள்ள ஏராளமான மாணவர்கள் 2-வது மொழியாக இந்தியை எடுத்துப் படித்து வருகிறார்கள். ஆனால், வடஇந்தியாவில் இருக்கும் மாணவர்கள் யாரேனும் தமிழ், மலையாளத்தை 2-வது மொழியாக எடுத்துப் படித்து வருகிறார்களா?
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவு மோசமான நிலையில் இருக்கிறது. அதனால்தான், இந்தியத் தூதர் அளித்த இப்தார் விருந்துக்கு வந்த விருந்தினர்களை பாகிஸ்தான் கெடுபிடி என்ற பெயரில் தொந்தரவு செய்துள்ளார்கள்.
புதிதாக அமைந்துள்ள மோடி அரசு, பாகிஸ்தான் தொடர்பான வெளியுறவுக் கொள்கைகள் அனைத்தையும் மறுஆய்வு செய்வது அவசியம். இனிவரும் ஆண்டுகளில் பாகிஸ்தானுடனான அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும், நாம் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதைப் பரிசீலிக்க வேண்டும். கடந்த 2014-ம் ஆண்டு பதவியேற்புக்கு பாகிஸ்தான் அழைக்கப்பட்ட நிலையில் இந்த முறை அழைக்கப்படவில்லையே. இரு தரப்பு உறவுகளில் நல்லவிதமான மாற்றம் தேவை''.
இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்