ஒன்பது நாட்கள் தேடலுக்குப் பிறகு அருணாச்சலபிரதேச மலைப்பகுதியில் காணாமல்போன விமானத்தின் பாகங்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டன. அதில் பயணம் செய்த 13 பேரின் நிலை தெரியவில்லை.
கடந்த 3-ம் தேதி அசாம் மாநிலம், ஜோர்ஹட் விமானப்படைத் தளத்தில் இருந்து அருணாச்சலபிரதேசத்தின் மெச்சுக்கா நகருக்கு இந்திய விமானப் படையின் ஏஎன்-32 ரக விமானம் புறப் பட்டது. அந்த விமானத்தில், விமானி உள்ளிட்ட 6 அதிகாரிகள், 5 வீரர்கள், 2 பொதுமக்கள் என மொத்தம் 13 பேர் பயணம் செய்தனர்.
ஜோர்ஹட்டில் இருந்து மதியம் 12.27 மணிக்குப் புறப்பட்ட இந்த விமானம் பிற்பகல் 1.30 மணிக்கு மெச்சுகா நகரை சென்றடைய வேண்டும். ஆனால் அருணாச்சலபிரதேசத்தின் மலைப் பகுதியில் சுமார் 12,000 அடி உயரத்தில் விமானம் பறந்தபோது பிற்பகல் 1 மணிக்கு ரேடாரில் இருந்து திடீரென மறைந்தது.
1,500 வீரர்கள் தேடினர்
உடனடியாக விமானத்தை தேடும் பணி தொடங்கப்பட்டது. எனினும் மோச மான வானிலை காரணமாக தேடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இந்திய விமானப்படையின் 9 போர் விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள், கடற்படையின் பி81 ரக விமானம், ஆளில்லா சிறிய ரக விமானங்கள், காணாமல் போன விமானத்தை இரவு பகலாக தேடி வந்தன. செயற்கைக்கோள்கள் உதவி யுடன் இஸ்ரோ விஞ்ஞானிகளும் விமானத்தை தேடினர்.
அதேநேரம் மலை கிராம மக்கள், உள்ளூர் போலீஸார், மலையேற்ற வீரர் கள், ராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்கள் என சுமார் 1,500-க்கும் மேற்பட் டோர் மலைப்பகுதியில் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். விமானம் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
உறவினர்கள் காத்திருப்பு
ஒன்பது நாட்கள் தேடலுக்குப் பிறகு அருணாச்சலபிரதேசத்தின் லிபோ மலைப் பகுதியில் காணாமல்போன விமானத்தின் பாகங்களை விமானப் படை ஹெலிகாப்டரின் விமானி நேற்று கண்டுபிடித்தார். இந்த தகவலை விமானப்படை உறுதி செய்துள்ளது. எனினும் விமானத்தில் பயணம் செய்த 13 பேரின் நிலைமை என்னவானது என் பது தெரியவில்லை. இதுகுறித்து விமானப்படை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
மோசமான வானிலை, செங்குத் தான மலைச்சரிவு காரணமாக விமான பாகங்கள் சிதறிக் கிடக்கும் மலைப் பகுதியில் ஹெலிகாப்டர்களை தரை யிறக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. அந்தப் பகுதியை தரைவழியாக சென் றடைய 2 நாட்கள் வரை ஆகும் என்று கூறப்படுகிறது.
விமானத்தில் பயணம் செய்த 13 பேரின் உறவினர்களும் அசாமின் ஜோர்ஹட் விமானப்படைத் தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தங்கள் உற வினர்கள் குறித்த தகவலை எதிர் பார்த்து அவர்கள் கவலையுடன் காத்திருக்கின்றனர்.
கருப்புப் பெட்டி
இந்திய விமானப் படையின் செய்தித் தொடர்பாளர் ரத்னாகர் சிங் கூறிய தாவது:
அருணாச்சலபிரதேசத்தின் வெஸ்ட் சியாங் மாவட்டம், டாட்டோ நகர் அருகே லிபா மலைப் பகுதியில் விமான பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கனமழை, கடும் மேகமூட்டம் காரண மாக விமானத்தை கண்டுபிடிக்க கால தாமதமாகிவிட்டது. விமானப் படையின் எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டரின் விமானி, விமான பாகங்களைக் கண்டுபிடித்தார். சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் விமான பாகங்கள் சிதறிக் கிடக்கின்றன. அந்த இடத்தில் ஹெலிகாப்டரை தரையிறக்கு வது கடினம். அருகில் உள்ள பகுதியில் ஹெலிகாப்டரை தரையிறக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
விமானத்தில் பயணம் செய்த 13 பேர் நிலை என்னவானது என்பதை முதலில் கண்டுபிடிப்போம். அதன்பிறகு விமானத்தின் கருப்பு பெட்டியைத் தேடுவோம். கருப்பு பெட்டி கிடைத்த பிறகுதான், என்ன காரணத்தினால் விமா னம் மலையில் விழுந்து நொறுங்கியது என்பது தெரியவரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பழைய விமானங்கள்
ரஷ்ய தயாரிப்பான ஏஎன் -32 ரக சரக்கு விமானம் இந்திய விமானப்படை யில் கடந்த 1984-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதுபோன்ற பழைய விமானங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்துகள் அதிகம். எனவே, இந்திய விமானப்படையில் இருந்து பழைய விமானங்கள் நீக்க வேண்டும் என்று சர்வதேச விமான போக்குவரத்துத் துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.