இந்தியா

உ.பி.யில் கோயில் அருகே மாட்டிறைச்சி சாப்பிட்டதொழிலாளர்களை தாக்கிய கும்பல்

ஐஏஎன்எஸ்

உத்தரப்பிரதேசம், ரேபரேலியில் கோயில் அருகே மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி 4 தொழிலாளர்களை ஒரு கும்பல் அடித்து உதைத்துவிட்டு சென்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக 4 தொழிலாளர்களையும் ஒரு கும்பல் இடுப்பில் அணியும் பெல்ட்டால் அடித்து உதைக்கும் காட்சியும், வலிதாங்காமல் அவர்கள் அலறும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையானதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கு ஆளாகிய அந்த தொழிலாளர்கள் 4 பேரும் ஒரு கொத்தனார் மூலம் பஹேரி பகுதிக்கு வேலைக்காக அழைத்து வரப்பட்டவர்கள். அந்த தொழிலாளர்களில் இருவர் சிறுபான்மையினர்.

இதுகுறித்து பஹேரி போலீஸ் நிலைய அதிகாரி தனஞ்செய சிங் கூறுகையில், " ஒரு கட்டமானப் பணிக்காக பஹேரியைச் சேர்ந்த கொத்தனார் ஒருவர் 4 தொழிலாளர்களை அழைத்துவந்துள்ளார். அவர்கள் நேற்று ஒரு கோயிலுக்கு அருகே இருந்த மரத்தடியில் அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார்கள்.

அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல் கோயில் அருகே மாட்டிறைச்சி சாப்பிடுவதாகக் கூறி  அவர்களை பெல்ட்டால் அடித்து , உதைத்துள்ளார்கள். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

ஆனால், தாக்குதலுக்கு ஆளாகிய தொழிலாளர்கள், நிருபர்களிடம் கூறுகையில்,  " எங்களிடம்  பசுமாட்டிறைச்சி ஏதும் இல்லை எனக் கூறியும் எங்களை அந்த கும்பல் தாக்கினார்கள் " எனத் தெரிவித்தனர்.

ரேபரேலி மாவட்ட போலீஸ் எஸ்பி முன்ராஜ் கூறுகையில், " இந்த தாக்குதல் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். ஆதேஷ் வால்மீகி, மணிஷ் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள், மற்ற 4  பேரைத் தேடி வருகிறார்கள் " எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT