இந்தியா

பெண்ணை நடுத்தெருவில் அடித்த பாஜக எம்.எல்.ஏ: சாரி சொல்லிவிடுகிறேன் என சமாளிப்பு

ஏஎன்ஐ

குஜராத்தில், தான் வசிக்கும் பகுதிக்கு முறையாக குடிதண்ணீர் வசதி கிடைக்காததைக் கண்டித்து  கோஷ்மிட்ட பெண்ணை எம்.எல்.ஏ., ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

அடித்துவிட்டு வேண்டுமென்றால் அப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுவிடுகிறேன் என எம்.எல்.ஏ. அளித்த பேட்டி இன்னும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரோடாவில் குடிதண்ணீர் வசதி கோரி போராட்டம் நடந்துள்ளது.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரை பாஜக எம்.எல்.ஏ., பல்ராம் தவானி சரமாரியாக தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பகிர அது இப்போது வைரலாகி வருகிறது.

பாதிக்கப்பட்ட பெண் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டிய்ல், "நான் எங்கள் பகுதி குடிதண்ணீர் பிரச்சினை குறித்து எம்.எல்.ஏ., பல்ராம் தவானியை சந்தித்து புகார் கொடுக்கச் சென்றேன். ஆனால் அவர் எந்தவித கேள்வியும் இல்லாமலேயே என் கன்னத்தில் அடித்தார். பின்னர் என்னை சரமாரியாகத் தாக்கினார். உடனே என் கணவர் என்னை மீட்க ஓடி வந்தார். அப்போது எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர்கள் பெரிய தடிகளைக் கொண்டு என் கணவரையும் தாக்கினர். என்னுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பல பெண்களையும் பல்ராம் ஆதரவாளர்கள் தாக்கினர்" எனக் கூறியுள்ளார்.

சாரி சொல்லிவிடுகிறேன்..

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் நிது தேஜ்வானி போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால், நடந்த சம்பவத்துக்கு வருந்துவதாக எம்.எல்.ஏ. கூறியிருக்கிறார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் "உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். தவறை ஒப்புக்கொள்கிறேன். அதை நான் வேண்டுமென்றே செய்யவில்லை. 22 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். இது போன்ற சம்பவம் நடந்ததில்லை. நான் அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுவிடுகிறேன்" எனக் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கண்டனம்:

பாஜக எம்.எல்.ஏ., மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குஜராத் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. குஜராத் காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சதவ், "பெண் ஒருவரை எம்.எல்.ஏ., தாக்கும் வீடியோ மனதை வருந்தச் செய்வதாக உள்ளது. மிகுந்த வேதனை தரும் அந்த சம்பவத்தைக் கண்டிக்கிறேன். பெண்களை பாஜகவிடமிருந்து காக்க வேண்டியுள்ளது. பாஜக சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ., மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வரும் இச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT