இந்தியா

மீரட்டில் திருநங்கைகளுக்கு காவல்நிலையத்திலேயே  கடும் அடி உதை: உ.பி. போலீஸார் நடவடிக்கை

செய்திப்பிரிவு

மீரட்டில் உள்ள காவல் நிலைய வளாகத்தினுள்  திருநங்கைகள் மீது போலீஸார் கடும் தடியடிப் பிரயோகம் செய்தனர். அடி தாங்காமல் அவர்கள் அலறியபடியே ஸ்டேஷன் வளாகத்துக்குள் அங்கும் இங்கும் மறைவிடம் தேடி ஓடி ஒளிய முயற்சி செய்யும் காட்சிகள் தொலைக்காட்சியில் வளைய வந்தன.

தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி செய்திகளின் படி, இந்தச் சம்பவம் மீரட்டின் லால் குர்தி காவல்நிலையத்தில் நடந்தது.  வந்த பரிசுகளை பகிர்ந்து கொள்வதில் திருநங்கைகள் குழுவினிடையே தகராறு ஏற்பட அதைக் கட்டுப்படுத்த லத்தி சார்ஜ் செய்ததாகப் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் நேரில் பார்த்த மற்ற சாட்சிகள் கூறுவதென்னவெனில் மீரட்டில் இரு திருநங்கைக் குழுக்களிடையே மோதல் ஏற்பட அங்கு உள்ள மக்கள் போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அங்கு சென்ற காவல்துறையினர் ஒரு குழுவை அழைத்து புகார் அளிக்க வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் காவல்நிலையம் உள்ளேயே இருகுழுக்களிடையே தகராறு ஏற்பட போலீஸார் தடியடி நடத்தியுள்ளனர்.

தடியடி கடுமையாக நிகழ திருநங்கைகள் காவல் நிலைய வளாகத்தில் அங்கும் இங்கும் அலறியபடி ஓடி ஒளிந்துள்ளனர். இது தொலைக்காட்சியில் காட்டப்பட்டது.

இது குறித்து காவல்துறை உயரதிகாரி நிதின் திவாரி கூறும்போது, “திருநங்கைகள் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு பெரும் இடையூறு விளைவித்தனர். அதனால் போலீஸார் பலப்பிரயோகம் செய்ய நேர்ந்தது. ஆனால் அதீத பலப்பிரயோகமாக இருந்தால் நிச்சயம் விசாரணை வைக்கப்படும்” என்றார்.

திருநங்கைகள் ஒரு புறம் சமூகத்தில் சில இடங்களில் மதிக்கப்பட்டு நல்ல முறையில் நடத்தப்பட்டாலும் பெரும்பாலும் அவர்கள் நாடு முழுதும் வன்முறையைச் சந்தித்து வருவதாகவே சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

SCROLL FOR NEXT