ஜார்க்கண்ட் மாநிலத்தில் செராய்கெலா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் 5 போலீஸார் கொல்லப்பட்டனர். கடந்த மாதம் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு மூன்றாவது முறையாக பாதுகாப்புப் படையினர் மீது இத்தாக்குதல் நடந்துள்ளது.
இத்தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்ததாவது:
''செராய்கெலா மாவட்டத்தின் திருல்டிக் காவல் நிலைய எல்லைப் பகுதியில் உள்ள குக்ரூபஜார் பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்ட்டுகள் கொரில்லா முறையில் மறைந்திருந்து தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு துணை ஆய்வாளர்கள் மற்றும் மூன்று கான்ஸ்டபிள்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட காவல் துறையினரின் துப்பாக்கிகளையும் நக்சல்கள் எடுத்துச் சென்றனர்.
இதை அடுத்து மாவட்டத் தலைமையகத்திலிருந்து கூடுதல் காவல்படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன''.
இவ்வாறு காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் முதல்வர் கண்டனம்
இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ரகுபார் தாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நக்சலைட்களின் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். காவல்துறையினரின் மரணம் வீண்போகாது'' என்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஜூன் 2 அன்று ஜார்க்கண்ட் தும்கா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் நான்குபேரும் கொல்லப்பட்டனர். கடந்த மே 28 அன்று செராய்கெலாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது கண்ணிவெடியில் சிக்கி 16 பேர் படுகாயமடைந்தனர்.