தேசிய புதிய கல்விக்கொள்கையை அவசரகதியில் அமலாக்கக் கூடாது என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.
மதுரை தொகுதியின் எம்பியான அவர் இன்று மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கை நேரில் சந்தித்தும் மனு அளித்துள்ளார்.
வரைவின் பல்வேறு விதிமீறல்களை சுட்டிக்காட்டி தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவருமான வெங்கடேசன் தனது மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் 1-ல் இந்தி, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வரைவிற்கு அடுத்த ஒரு மாதத்தில் கருத்து கூற வலியுறுத்தப்பட்டு உள்ளது. 484 பக்கங்களிலான வரைவு தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் இல்லை.
இதனால், இந்தி, ஆங்கிலம் அறிந்தவர்கள் மட்டுமே அதன் மீது கருத்து கூற முடியும் எனவும், மற்ற மொழியாளர்களின் கருத்து தேவை இல்லை என்ற தொனி தெரிகிறது.
கடந்த வருடம் டிசம்பர் 15-ல் உருவான வரைவு ஐந்தரை மாதங்கள் கால தாமதமாக மே 31 வரை சமர்ப்பிக்கக் காத்திருந்துள்ளது. இதன் காரணம் என்ன என்பதை அக்குழுவால் விளக்கப்படவில்லை.
இதற்காக அரசும் அக்குழுவிடம் கேள்வி எழுப்பத் தவறி விட்டது. இதனால், 30 நாட்களுக்குள் பொதுமக்கள் கருத்து கூற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசிற்கு இதே கால.அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு அமைப்பதிலும் கூட்டாச்சி முறையில் அரசு ஜனநாயக முறையை பின்பற்றாதது கவலையளிக்கிறது. கல்விக்கான உயரிய கொள்கைகள் வகுக்கும் முக்கிய அமைப்பாக இருப்பது மத்திய கல்வி ஆலோசனைக்குழு.
இதில் அனைத்து மாநில பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளனர். இந்த ஆலோசனைக்குழு தேசிய புதிய கல்விக்கொள்கைக்காக கூடியிருந்திருக்க வேண்டும். இதுபோன்ற ஜனநாயக் விதிமுறைகள் புதிய கல்விக்கொள்கை அமைப்பதில் கடைப்பிடிக்கப்படவில்லை.
பள்ளி மற்றும் கல்லூரி அமைப்புகளில் மாற்றம் செய்ய புதிய கல்விக்கொள்கை அறிவுறுத்துகிறது. தற்போதுள்ள கல்விமுறையை இது முற்றிலும் மாற்றி அமைக்கக் கோருகிறது. இந்த மாற்றங்கள் ஏற்பது மிகவும் சிரமம் மட்டும் அன்றி அவை, சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய மக்களின் நலனுக்கு எதிராக உள்ளது.
இந்த வரைவின் மீது தமிழகத்தின் கல்வியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், எழுத்தாளர்களும் அதன் சங்கத்தினரும் கலந்து ஆலோசனை செய்தனர். அதில் புதிய கல்விக்கொள்கை எதிர்கால சந்ததிக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என அறியப்பட்டுள்ளது.
இந்த வரைவின் மொழிபெயர்ப்பு அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்வதுடன், கால அவகாசமும் கூடுதலாக அளிக்கப்பட வேண்டும். இதற்காக அரசின் கவனத்தை கவர மாநிலம் முழுவதிலும் பல்வேறுவகை போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதை வலியுறுத்தி மத்திய அரசிற்கு ஈமெயில் உள்ளிட்ட பல வகைகளில் கோரப்பட்டு வருகிறது. எனவே, இந்திய அரசியலமைப்பின் எட்டாவது பிரிவில் இடம்பெற்ற 22 மொழிகளிலும் மொழிபெயர்ப்பதுடன் ஆறு மாத கால அவகாசமும் அளிக்க வேண்டும் என கோருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.