கேரள மாநிலத்தில் ஐந்து நட்சத்திர அந்தஸ்து அல்லாத ஓட்டல்களில் இயங்கி வரும் பாருடன் கூடிய 730 சிறு மது விற்பனை கடைகளை மூடும் மாநில அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கேரளத்தில் 10 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கை அமல் படுத்தும் நோக்கில், ஆண்டு தோறும் 10 சதவீத மதுக்கடைகள் மூடப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக, செப்டம்பர் 12-ம் தேதி 730 சிறு மது விற்பனைக் கடைகள் மூடப்படும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த கொள்கை முடிவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் கேரள உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
வெள்ளிக்கிழமை முதல் இந்த உத்தரவு அமலுக்கு வர உள்ளதால், இதற்கு தடை விதிக்கக் கோரி கேரள மது விற்பனை ஓட்டல்கள் சங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு நீதிபதி அனில் தவே அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “கேரள அரசின் முடிவு பாரபட்சமானது. ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் உள்ள மது கடைகள் மற்றும் கள்ளுக்கடைகள் மூடப்படவில்லை. சிறு மது விற்பனைக் கடைகளை மட்டும் மூட உத்தரவிட்டுள்ளது. இது பெரிய ஓட்டல்களுக்கு சாதகமாக எடுக்கப்பட்டுள்ள முடிவு. இதில் மதுவிலக்கு கொள்கை எதுவும் இல்லை” என்று வாதிட்டனர்.
கேரள அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “ஆண்டுதோறும் 10 சதவீத கடைகள் வீதம் மூடப்படும். மதுவிலக்கு கொள்கையை முழுமையாக அமல்படுத்தும் நோக்கத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.
இதைக்கேட்ட நீதிபதி அனில் தவே, “நான் மது அருந்த மாட்டேன். இருந்தாலும், கேரள அரசின் முடிவில் எந்த நியாயமும் இருப்பதாக தெரியவில்லை” என்றார். இந்த விவகாரம் குறித்து வியாழக்கிழமை விரிவான விசாரணை நடத்தப்படும். அதுவரை கேரள அரசு மது விற்பனைக் கடைகளை மூடும் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற உள்ளது.