ஆயுதம் ஏந்திய எல்லைப் படை வீரர்களுக்கும் ஜார்க்கண்ட் காடுகளைச் சேர்ந்த மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு ஜவான் வீரமரணம் அடைந்தார். நான்கு படை வீரர்கள் காயமடைந்தனர்.
இதுகுறித்து மூத்த காவல் கண்காணிப்பாளர் ஒய்.எஸ்.ரமேஷ் தெரிவித்ததாவது:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தும்கா மாவட்டத்தில் உள்ள துல்டாங்கல் காடுகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக ஆயுதம் ஏந்திய எல்லைப் படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 3.30 மணி அளவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிகளால் சுட்டனர். எல்லைப் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதில் ஐந்து மாவோயிஸ்டுகளின் மீதாவது குண்டடிப் பட்டிருக்கும். இதனால் அவர்கள் காட்டுக்குள் பின்வாங்கினர்.
இத் துப்பாக்கி சண்டையில் எஸ்எஸ்பி ஜவான் நீரஜ் சவுத்ரி கொல்லப்பட்டார். ராஜேஷ் குமார் ராய், சோனு குமார், சதீஷ் குஜார் மற்றும் கரண் குமார் ஆகியோர் காயமடைந்தனர்.
இதில் ராய் மட்டும் சிகிச்சைக்காக ராஞ்சிக்கு விமானத்தில் கொண்டுசெல்லப்பட்டுள்ளார். மற்றவர்கள் தும்காவில் உள்ள சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.