பெண்களுக்கு பேருந்து, மெட்ரோவில் இலவச பயண திட்டத்தை ஆட்சி முடியும் தருவாயில் அறிவித்து மக்களை அர்விந்த் கேஜ்ரிவால் ஏமாற்றுவதாகக் கூறுகிறார் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி.
டெல்லியில் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் வேலைக்குச் செல்லும் பெண்கள் ஷேர் கேப்கள் அல்லது தனியார் கேப்களை பயன்படுத்தும் நிலை அதிகமாக உள்ளது.
இதனால், அவ்வப்போது அவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுகிறது. பாலியல் குற்றங்கள் நடைபெறுகிறது.
இந்நிலையில், டெல்லியில் பெண்கள் பேருந்து, மெட்ரோக்களில் இனி இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று (திங்கள்கிழமை) அறிவித்தார்.
மாநிலம் முழுவதும் இயங்கும் பேருந்துகளில் பயணிக்கும் 40 லட்சம் பயணிகளில் 30% பேர் பெண்கள் ஆவர். இந்தத் திட்டத்தின் மூலம் அதிகக் கட்டணம் காரணமாக பாதுகாப்பான பயணத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத பெண்களுக்கு இது உதவிகரமாக இருக்கும் என்று கேஜ்ரிவால் தெரிவித்தார்.
பாஜக விமர்சனம்:
ஆனால், பாஜக இத்திட்டத்தை விமர்சித்துள்ளது. டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, "52 மாதங்களாக நடத்த முடியாத விஷயத்தை ஆட்சி முடியவிருக்கும் 5,6 மாதங்களில் கேஜ்ரிவால் ஏன் கையில் எடுத்திருக்கிறார்? இதன் மூலம் அவர் மக்களை ஏமாற்றவே முயல்கிறார்.
முதலில் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்கள் பாதுகாப்புக்கு காவலர்களை நியமிப்பேன். போக்குவரத்து வாகனங்களை ஆபத்தைத் தெரிவிக்கும் பேனிக் பட்டன் பொருத்தப்படும் என்றெல்லாம் கூறினார். இப்போது அவரே பேரதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார் என நினைக்கிறேன். எந்த தந்திரத்தைப் பயன்படுத்தி டெல்லி மக்களை திசைதிருப்பலாம் எனத் தெரியாமல் புரியாமல் நிற்கிறார்" எனக் கூறியுள்ளார்.